மயிலாடுதுறை அருகே த.வா.க. பிரமுகர் படுகொலை!

5

மயிலாடுதுறை; மயிலாடுதுறை அருகே தமிழக வாழ்வுரிமை கட்சி பிரமுகரை 2 கார்களில் வந்த மர்ம நபர்கள் வெட்டி படுகொலை செய்தது தொடர்பாக 5 தனிப்படைகள் அமைத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


புதுச்சேரி மாநிலம் காரைக்கால் மாவட்டம் திருநள்ளாறு பகுதியை சேர்ந்தவர் தேவமணி. பா.ம.க., மாவட்ட செயலாளராக பதவி வகித்தவர். இவருக்கும் இவரது உறவினரான அதே பகுதியை சேர்ந்த ஹரி கிருஷ்ணன் மகன் மணிமாறன் (34) என்பவருக்கும் இடையே இட பிரச்சனை தொடர்பான தகராறு இருந்து வந்துள்ளது.


2021ம் ஆண்டு அக்டோபர் 22ம் தேதி இரவு அலுவலகத்தில் இருந்து வீட்டிற்கு புறப்பட்ட தேவமணியை மர்ம கும்பல் வெட்டி படுகொலை செய்தது. இந்த வழக்கில் முதல் குற்றவாளியாக கைது செய்யப்பட்ட மணிமாறன் தற்போது ஜாமினில் உள்ளார். இவர் தமிழக வாழ்வுரிமை கட்சி பிரமுகராவும் இருக்கிறார்.


இந் நிலையில் மயிலாடுதுறைகளில் நடந்த அக்கட்சியின் உறுப்பினர் சேர்க்கை முகாமில் மணிமாறன் கலந்து கொண்டு காரில் ஊர் திரும்பியுள்ளார். வழியில் செம்பனார்கோவில் காளகஸ்திநாதபுரம் தனியார் கல்லூரி எதிரே 2 கார்களில் வந்த மர்ம கும்பல் வழிமறித்து காரை சேதப்படுத்தியதுடன், மணிமாறனை சரமாரியாக அரிவாளால் வெட்டி விட்டு தப்பி சென்றுள்ளனர். இதில் தலை சிதைந்த நிலையில் சம்பவ இடத்திலேயே மணிமாறன் உயிரிழந்தார்.


தகவல் அறிந்த செம்பனார்கோவில் போலீசார் மணிமாறன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தவுடன், கொலை வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். மயிலாடுதுறை எஸ்.பி., ஸ்டாலின் சம்பவ இடத்தை நேரில் பார்வையிட்டு விசாரணை நடத்தினார்.


மேலும் இந்த கொலை சம்பவம் தொடர்பாக 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

Advertisement