அன்று தார் ரோடுக்கு எதிர்ப்பு இன்று ரோடு அமைக்க ஆதரவு

வேடசந்துார்: புங்கம்பாடி -நல்துார் தார் ரோடு அமைக்கப்பட்ட போது குளத்துக்கரையிலிருந்து அரை கி.மீ., துாரம் உள்ள நல்லுார் வரை ரோடு அமைக்க எதிர்ப்பு தெரிவித்த விவசாயிகள் இன்று ரோடு அமைக்க வலியுறுத்தி வருகின்றனர்.

ஆர்.கோம்பை புங்கம்பாடியிலிருந்து கோவிலுார் நல்லூர் வரை மூன்று கி.மீ., துாரத்திற்கு பாரதப் பிரதமரின் கிராம சாலைகள் திட்டத்தின் கீழ் 10 ஆண்டுகளுக்கு முன்பு முதல் முறையாக தார் ரோடு அமைக்க நிதி ஒதுக்கப்பட்டது. இதை தொடர்ந்து புங்கம்பாடியில் இருந்து குளத்துக்கரை வரை தார் ரோடு அமைத்தனர். குளத்துக்கரையில் இருந்து அரை கி.மீ., துாரம் உள்ள நல்லூர் வரை மண் ரோட்டின் இருபுறமும் உள்ள விவசாயிகள் தார் ரோடு அமைக்க எதிர்ப்பு தெரிவித்த நிலையில் தடை கோரி நிதிமன்றம் சென்றனர். இதனால் அரை கி.மீ., துாரம் ரோடு போடாமலே திட்டம் முடிக்கப்பட்டது. தற்போது கால மாற்றம் காரணமாக அப்பகுதி விவசாயிகள் மனம் மாறி தார் ரோடு அமைக்க கோரி உள்ளனர். நல்லுார் விவசாயி கே.கிருஷ்ணன் கூறியதாவது:அரை கி.மீ., துாரத்திற்கு மண் ரோடாகவே உள்ளது. பட்டா பிரச்னை இருந்ததால் நீண்ட காலமாக ரோடு அமைக்கவில்லை. இப்போது இப்பகுதி விவசாயிகள் அனைவரும் மனம் மாறி, ரோடு அமைக்க தடை இல்லை என எழுதிக் கொடுத்து விட்டோம். அரை கி.மீ., துாரத்திற்கு தார் ரோடு அமைக்க மாவட்ட நிர்வாகம் முன் வர வேண்டும் என்றார்.

Advertisement