ஆக்கிரமிப்பால் அவதி: மக்கள் நடமாடும் இடங்களில் சிறு சிறு கடைகள்: ரோட்டில் நடக்கும் நிலையால் தினமும் நெருக்கடி

-ஒட்டன்சத்திரம்: திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பல நகரங்களில் மக்கள் நடமாட்டம் மிகுந்த இடங்களில் சிறு வியாபாரிகள் ஆக்கிரமிப்பதால் பொதுமக்கள் ரோட்டில் நடந்து செல்ல தினமும் நெருக்கடி ஏற்படுகிறது.

மாவட்டத்தில் திண்டுக்கல் மாநகராட்சி, பழநி, கொடைக்கானல், ஒட்டன்சத்திரம் நகராட்சிகள் உள்ளன. பல பேரூராட்சிகள் உள்ளன. நகரங்களில் உள்ள பஸ் ஸ்டாண்ட்களில் சிறு வியாபாரிகள் ஆக்கிரமிப்பு அதிகமாக உள்ளது. இதனால் பயணிகள் தாராளமாக நடந்து சென்று பஸ் ஏறுவதில் சிரமம் ஏற்படுகிறது. குறிப்பாக நடைபாதைகளை ஆக்கிரமித்து வியாபாரிகள் கடைகளை வைத்துள்ளதால் நெரிசல் ஏற்படுகிறது. பல பஸ் ஸ்டாண்ட்களில் கடைகளுக்காக வியாபாரிகளுக்கு ஒதுக்கப்பட்ட இடங்களை தாண்டி இரண்டு மூன்று அடிகள் ஆக்கிரமிப்பதால் நடைபாதை சுருங்கி விடுகிறது. இதனால் பயணிகள் நெரிசலுடன் அந்த இடங்களை கடந்து செல்ல வேண்டி உள்ளது.

இதேபோல் நகரங்களில் மக்கள் நடமாட்டம் மிகுந்த ரோடுகள், தெருக்களில் தள்ளுவண்டி ,சிறு வியாபாரிகளின் ஆக்கிரமிப்பு அதிகமாக இருப்பதால் அவ்வழியே செல்லும் பொதுமக்கள் ரோட்டில் நடந்து செல்வதால் தினமும் நெரிசல் ஏற்படுகிறது . சில நேரங்களில் வாகன விபத்துகளும் ஏற்படுகிறது. ஆக்கிரமிப்புகளை அகற்றி பொதுமக்கள் தாராளமாக நடந்து செல்ல வழிவகை செய்ய வேண்டும்.

.......

கண்காணிப்பு தேவை

பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்கள் ,பஸ் ஸ்டாண்ட்களில் ஆக்கிரமிப்புகள் அதிகரித்து வருவதால் நடந்து செல்வதற்கு சிரமமாக உள்ளது. பத்தடி பாதை உள்ள இடங்களில் பாதிக்கு மேல் ஆக்கிரமித்துக் கொள்கின்றனர். இதனால் அந்த வழியை கடந்து செல்பவர்கள் மிகுந்த நெருக்கடிக்கு ஆளாகின்றனர். குறுகிய இடத்தில் பஸ்சை பிடிப்பதற்காக வேகமாக செல்லும்போது தடுமாறி விழும் வாய்ப்பு உள்ளது. பெயரளவில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்படுவதால் அடுத்த ஒரு சில நாட்களில் மீண்டும் அதே நிலை நீடிக்கிறது. ஆக்கிரமிப்புகளை அகற்றி மீண்டும் ஆக்கிரமிப்பு செய்யாமல் இருக்கும் வகையில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தொடர் கண்காணிப்பில் ஈடுபட வேண்டும். இவ்வாறு செய்தால்தான் இதற்கு ஒரு நிரந்தர தீர்வு காண முடியும்.

- டி. குமார் தாஸ் ,பா.ஜ., நகரத் தலைவர் ஒட்டன்சத்திரம்.

Advertisement