பயிர்களை வன விலங்குகள் சேதப்படுத்துவதால் விவசாயிகள் பாதிப்பு...: கிடப்பில் போடப்பட்ட சோலார் வேலி, அகழி அமைக்கும் திட்டம்

போடி: தேனி மாவட்டத்தில் காட்டுப்பன்றி, காட்டுமாடு உள்ளிட்ட வன விலங்குகளால் மிளகு கொடி, ஏலம், கிழங்கு உள்ளிட்ட பயிர்களை சேதம் ஏற்படுத்தி வருவதால் விவசாயிகள் பாதிப்பிற்குள்ளாகி வருகின்றனர். இதனை தடுக்க சோலார் மின்வேலி, அகழி அமைக்கும் திட்டம் கிடப்படில் போடப்பட்டுள்ளது.

மாவட்டத்தில் போடி அருகே குரங்கணி, முட்டம், முதுவாக்குடி, பிச்சாங்கரை, வடக்குமலை, அகமலை உள்ளிட்ட பகுதியில் 25 ஆயிரம் காபி, ஏலம், இலவம் உள்ளிட்ட பயிர்கள் பயிரிட்டு உள்ளனர். பெரியகுளம் தாலுகா மலையடிவார பகுதியில் 10 ஆயிரம் ஏக்கரில் மா சாகுபடி உள்ளது.

போடி மலையடிவார பகுதியில் உள்ள வளர்ந்த மரங்களில் மிளகு கொடிகளையும் வளர்த்து வருகின்றனர். கொடியில் மிளகு நன்கு வளர்ந்துள்ள நிலையில் காட்டு பன்றிகள் கூட்டம் கூட்டமாக வந்து மிளகு கொடி, சேமக்கிழங்குகளை சேதப்படுத்தி வருகின்றன. இதே போல் ஏலச்செடிகளை காட்டுமாடு உள்ளிட்ட வன விலங்குகள் சேதம் ஏற்படுத்தி வருகின்றன. இதனால் விளைந்த மிளகு பறிக்க முடியாமல் விவசாயிகள் சிரமம் அடைந்து வருகின்றனர்.

வன விலங்குகளிடம் இருந்து பயிர்களை காக்கும் வகையில் அகழிகள் அமைக்கவும், 25 கி.மீ., தூரத்திற்கு சோலார் மின்வேலி அமைக்க மாவட்ட நிர்வாகம் முதன்மை பாதுகாப்பு அலுவலருக்கு பரிந்துரை செய்து பல ஆண்டுகளாகியும் திட்டம் செயல்படுத்தாமல் முடங்க உள்ளது. வெயில், மழை, சூறைக் காற்று போன்ற இயற்கை சீற்றங்களால் அவதிப்படும் விவசாயிகள் வன விலங்குகளாலும் பாதிப்பிற்குள்ளாகின்றனர்.

வனப்பகுதியில் குடிநீர் தேக்கத்திற்கான தடுப்பணைகள் இல்லாததால் தண்ணீரை தேடி வரும் வன விலங்குகள் தோட்ட பகுதிகளுக்கு வருகின்றன. எதிர்பாராத வகையில் காட்டுமாடு விவசாயிகளை தாக்குவதால் காயம, உயிர் பலியாகும் நிலை தொடர்கிறது. இதனால் விவசாயம் செய்வது விவசாயிகளுக்கு சவலாக மாறி உள்ளது.

வன விலங்குகளிடம் இருந்து பயிர்களை காக்கவும், வன விலங்குகள் உயிர் பலியாவதை தடுக்க வனப்பகுதியை சுற்றி அகழி அமைப்பதோடு, 25 கி.மீ., தூரம் சோலார் மின் வேலி அமைக்க மாவட்ட நிர்வாகம், முதன்மை பாதுகாப்பு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர்.

Advertisement