கால்வாய் துார்ந்ததால் கழிவுநீர் தேங்கும் அவலம்

வாலாஜாபாத்:புளியம்பாக்கத்தில், கால்வாய் துார்ந்ததால், கழிவுநீர் வெளியேற வழியின்றி தேங்கி நிற்கிறது.

வாலாஜாபாத் ஒன்றியம், புளியம்பாக்கம் கிராமத்தில் படவேட்டம்மன் கோவில் தெரு பகுதியில் மழைநீர் வடிகால்வாய் அமைக்கப்பட்டுள்ளது. இந்த கால்வாய் தண்ணீர் அப்பகுதி நிலங்கள் வழியாக வெளியேற வழிவகை ஏற்படுத்தப்பட்டு, கடந்த ஆண்டுகளில் பயன்பாட்டில் இருந்தது.

இந்நிலையில், சில மாதங்களுக்கு முன், கால்வாயின் குறிப்பிட்ட ஒரு சில பகுதிகள், பட்டா நிலத்தில் உள்ளதாக கூறி சிலர் துார்த்துள்ளனர். இதனால், அப்பகுதி குடியிருப்புகளில் இருந்து கால்வாயில் விடப்படும் கழிவுநீர், சீராக வெளியேற வழி இல்லாமல் ஆங்காங்கே தேங்கி சுகாதாரமற்ற முறையில் உள்ளது.

இதுகுறித்து, புளியம்பாக்கம் படவேட்டம்மன் கோவில் தெரு மக்கள் சிலர் கூறியதாவது:

புளியம்பாக்கத்தில் பல்வேறு குடியிருப்பு பகுதி களில் இருந்தும் வெளியேற்றப்படும் கழிவு நீர், படவேட்டம்மன் கோவில் தெரு பிரதான சாலை வழியாக மழைநீர் வடிகால்வாய் மூலம் வெளியற்றப்பட்டு வந்தது.

இதனிடையே கடைகோடி கால்வாய் பகுதி துார்ந்ததால், கழிவுநீர் வெளியேற வழியின்றி தேங்கி நிற்கிறது. மேலும், சில இடங்களில் கால்வாயில் கழிவுநீர் நிரம்பி குடியிருப்பு வாசல்களில் வழிந்தோடுகிறது.

இதனால், கொசு உற்பத்தி அதிகரித்து சிலருக்கு காய்ச்சல் உள்ளிட்ட தொற்றுகள் ஏற்படுகின்றன.

எனவே, இக்கால்வாயில் தேங்கும் கழிவுநீரை வெளியேற்ற ஊராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

Advertisement