வங்கி கணக்கு,சிம் கார்டை யாருக்கும் கொடுக்க வேண்டாம் சைபர் கிரைம் எச்சரிக்கை 

புதுச்சேரி: பொதுமக்கள் தங்களது வங்கி கணக்கு மற்றும் சிம் கார்டுகளை யாருக்கும் கொடுக்க வேண்டாம் என புதுச்சேரி சைபர் போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து சைபர் கிரைம் இன்ஸ்பெக்டர் தியாகராஜன் கூறியதாவது:

இணையவழி மோசடிக்காரர்களுக்கு அதிக பணம் பரிவர்த்தனை செய்ய வங்கிக் கணக்குகள் தேவைப்படுவதால் சமூக வலைதளங்கள் மூலம் பொதுமக்களை தொடர்பு கொண்டு, அவர்கள் கொடுக்கும் வங்கிக் கணக்கிற்கு கமிஷன் தருவதாக ஆசை வார்த்தை கூறுகின்றனர்.

இதைநம்பி பொதுமக்கள் யாரும் உங்களுடைய வங்கிக் கணக்கு மற்றும் சிம் கார்டு போன்றவற்றை யாருக்கும் கொடுக்க கூடாது. மேலும், பொது மக்கள் தங்களது ஆவணங்களை பயன்படுத்தி வங்கிக் கணக்குகளை துவக்கி கொடுக்க வேண்டாம்.

உங்களுடைய வங்கிக் கணக்கில் வரும் பணத்திற்கு கமிஷன் தருகிறோம் என்று யாராவது கேட்டால், இதை நம்பி, உங்களுடைய வங்கிக் கணக்கு மற்றும் சிம் கார்டை வழங்க வேண்டாம்.

அவ்வாறு பொதுமக்கள் கொடுக்கும் வங்கிக் கணக்கு மற்றும் சிம் கார்டுகள் ஆகியவற்றை பயன்படுத்தி, சைபர் மோசடிக்காரர்கள் பல்வேறு பணமோசடிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதனால், உங்களுடைய பெயரிலான வங்கிக் கணக்கு மற்றும் சிம் கார்டுகள் பயன்படுத்தப்படுவதால், மோசடியில் உங்களுக்கும் தொடர்பு உடையதாக கருதப்படும். அதன் அடிப்படையில் உங்கள் மீதும் சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Advertisement