ஆடுகளை கடிக்கும் மர்ம விலங்கு டிரோன் கேமராவில் கண்காணிப்பு

மயிலம்: மயிலம் அருகே ஆடுகளைக் கடிக்கும் மர்ம விலங்கை பிடிக்க 'டிரோன்' கேமரா மூலம் வனத்துறையினர் கண்காணித்து வருகின்றனர்.

விழுப்புரம் மாவட்டம், மயிலம் ஒன்றியத்தில் உள்ள ரெட்டணை கிராமத்தில் கடந்த 4ம் தேதி இரவு மர்ம விலங்கு கடித்ததில் ஊராட்சி மன்ற உறுப்பினர் கேசவன் என்பவருக்கு சொந்தமான 2 ஆடுகள் பலியாகின.

இது குறித்து கிராம மக்கள் திண்டிவனம் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

இதனைத்தொடர்ந்து மாவட்ட வன அலுவலர் கார்த்திகேயனி தலைமையில், அலுவலர் புவனேஷ் உள்ளிட்டோர், மர்ம விலங்கின் கால் தடயங்களை பதிவு செய்து ஆய்வு செய்து வருகின்றனர்.

மேலும், ரெட்டணை கிராமத்தில் வனத்துறை சார்பில் பல இடங்களில் கண்காணிப்பு கேமரா பொருத்தியும், 'டிரோன்' மூலமும் மர்ம விலங்கின் நடமாட்டத்தை தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். ரெட்டணை ஏரிக்கரை அருகே உள்ள கால்வாயில் கூண்டு வைத்துள்ளனர்.

ஆனால், இதுவரை கிராமத்தில் வைத்துள்ள கேமராவில் மர்ம விலங்கின் தடயங்கள் எதுவும் பதிவாகவில்லை. தற்போது இந்த பகுதி முழுவதும் வனத்துறை கண்காணிப்பில் உள்ளது.

Advertisement