கிடப்பில் பொத்துமரத்து ஊருணி துார்வாரும் பணி; குப்பை கிடங்காக மாறிய அவலம்
சிவகாசி : சிவகாசியில் ரூ.1.70 கோடியில் பொத்துமரத்து ஊருணியில் துார்வாரும் பணி நீதிமன்ற உத்தரவை காரணம் காட்டி கிடப்பில் போடப்பட்டதால் குப்பை கொட்டப்பட்டு வருவதால் மக்கள் அதிருப்தியில் உள்ளனர்.
சிவகாசி பஸ் ஸ்டாண்ட் எதிரே உள்ள பொத்துமரத்து ஊருணி மாநகராட்சி நிர்வாகம் சார்பில் துார்வாரி கரைகளில் பூங்கா உடன் கூடிய நடைபாதை அமைக்க நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.1.70 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. ஊருணியை துார்வாரும் பணிக்காக 2022 மே மாதம் பூமி பூஜை போடப்பட்டது.
துார்வாரும் பணிக்காக நில அளவீடு செய்தபோது 4.99 ஏக்கர் பரப்பளவு கொண்ட ஊருணியில் 35 சதவீதத்துக்கும் மேலான நீர்நிலை பகுதிகளில் வீடுகள், வணிகக் கடைகள் என 83 ஆக்கிரமிப்பு கட்டடங்கள் இருப்பது தெரிந்தது. இதையடுத்து ஆக்கிரமிப்பாளர்களுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டு, ஆக்கிரமிப்பில் இருந்த கட்டடங்களை இடிக்கும் பணிகள் தொடங்கின. அதன்படி ஊருணிக்கு மேற்குப் பகுதியில் உள்ள 20 க்கும் மேற்பட்ட வீடுகள், தெற்கு கரையில் உள்ள 15 க்கும் மேற்பட்ட கடைகள் இடிக்கப்பட்டன.
நீர்நிலை பகுதியில் ஆக்கிரமித்து கட்டப்பட்ட வீடுகளுக்கு பதில் வருவாய்த்துறை சார்பில் எம்.புதுப்பட்டி அருகே 43 பேருக்கு இலவச வீட்டுமனைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டது. வீடுகளை இடிப்பதற்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில், வீடுகளை காலி செய்ய 6 மாதம் அவகாசம் வழங்கி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்நிலையில் ஊருணியை தூர்வாருவதில் ஏற்படும் தாமதத்தை காரணமாகக் கூறி, 2024 செப்டம்பர் மாதம் நடந்த மாநகராட்சி கூட்டத்தில் ஊருணி துார்வாரும் ஒப்பந்தத்தை ரத்து செய்ய தீர்மானம் கொண்டு வரப்பட்டது. ஏற்கனவே பல லட்சம் ரூபாய் செலவிடப்பட்ட நிலையில், ஆக்கிரமிப்புகளை அகற்றுவதில் அதிகாரிகள் பாரபட்சம் காட்டியதால்தான் துார்வாரும் பணியில் சிக்கல் ஏற்பட்டதாக குற்றம் சாட்டிய கவுன்சிலர்கள், ஒப்பந்தத்தை ரத்து செய்ய எதிர்ப்பு தெரிவித்தனர். இதைத் தொடர்ந்து அந்த தீர்மானம் நிறுத்தி வைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.
ஆனால் அதன் பின் ஊருணியை தூர்வாரும் பணியில் ஆர்வம் காட்டாத அதிகாரிகள், ஊருணியில் கழிவுகள் கலப்பதையும் குப்பை கொட்டப்படுவதையும் தடுக்க முன்வரவில்லை. இதனால் ஊருணியில் மீண்டும் குப்பை மற்றும் கழிவுகள் கொட்டப்பட்டு வருகிறது. இதேநிலை தொடர்ந்தால் ஊருணி குப்பை கிடங்காக மாறுவதுடன், மீண்டும் ஆக்கிரமிப்புகள் செய்ய வாய்ப்பு உள்ளது.
மேலும்
-
ரூ.50,000க்கு குழந்தை விற்பனை தாய் உட்பட மூவரிடம் விசாரணை
-
போக்குவரத்து அமைச்சருக்கு 'ஷாக்' கொடுத்த பஸ் ஊழியர்கள்
-
'ஜாதி, மதத்தை வைத்து தி.மு.க., அரசியல்'
-
500 அங்கன்வாடி மையங்கள் மூடல்; அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம்
-
பூத்திற்கு 37 ஓட்டுகள் கூடுதலாக பெற்றால் தி.மு.க., அணியை வீழ்த்தலாம்: நாகேந்திரன்
-
தலைமை ஆசிரியர், அதிகாரிகள் பணியிடம் காலி: தடுமாற்றத்தில் பள்ளிக்கல்வி நிர்வாகம்