ராய்ட்டர்ஸ் கணக்கு முடக்கம்:' எக்ஸ்' நிறுவனத்தின் குற்றச்சாட்டுக்கு மத்திய அரசு மறுப்பு

1

புதுடில்லி: ''ராய்ட்டர்ஸ் மற்றும் ராய்ட்டர்ஸ் வோர்ல்ட் உள்ளிட்ட எந்த சர்வதேச சேனல்களை முடக்கும் எண்ணம் அரசுக்கு இல்லை ,'' என மத்திய அரசு கூறியுள்ளது.


ஐரோப்பிய நாடான பிரிட்டனின் லண்டனை தலைமையிடமாக வைத்து, 'ராய்ட்டர்ஸ்' சர்வதேச செய்தி நிறுவனம் செயல்பட்டு வருகிறது.இந்நிறுவனத்தின் எக்ஸ் சமூக வலைதள கணக்கு, நம் நாட்டில் நேற்று முடங்கியது. அதில், சட்டப்பூர்வ கோரிக்கையின் அடிப்படையில் கணக்கு முடக்கப்பட்டுள்ளது என, குறிப்பிடப்பட்டிருந்தது. இது குறித்து மத்திய அரசு அளித்த விளக்கத்தில் தெரிவித்து இருந்ததாவது: ராய்ட்டர்ஸ் நிறுவனத்தின் எக்ஸ் கணக்கை முடக்கும்படி நாங்கள் கேட்கவில்லை. தொழில்நுட்பப் பிரச்னையால் இது நடந்திருக்கலாம். இது குறித்து எக்ஸ் நிறுவனத்திடம் விளக்கம் கேட்டுள்ளோம்.விரைவில் இந்த பிரச்னை சரிசெய்யப்படும். இது தொடர்பாக, எக்ஸ் நிறுவனத்தின் அதிகாரிகளுடன் தொடர்ந்து பணியாற்றி வருகிறோம் எனக்கூறியிருந்தது.



இதனிடையே, இன்று எக்ஸ் நிறுவனம் வெளியிட்ட விளக்கத்தில், ' ராய்ட்டர்ஸ் முடக்கம் பத்திரிகைகள் மீதான தணிக்கை, ' எனத் தெரிவித்து இருந்தது. மேலும், ராய்ட்டர்ஸ் மற்றும் ராய்ட்டர்ஸ் வோர்ல்ட் உள்ளிட்ட கடந்த 3ம் தேதி 2,355 கணக்குகளை முடக்க வேண்டும் என மத்திய அரசு உத்தரவிட்டு இருந்தது. அதனை செய்யாவிட்டால், அபராதத்தை சந்திக்க வேண்டியுள்ளதால் எங்களுக்கு வேறுவழியில்லை. முடக்கத்தை சந்தித்த நிறுவனங்கள் நீதிமன்றங்களை நாடி தீர்வு காண வேண்டும். ஐ.டி., சட்டப்பிரிவு 69 ஏன் கீழ் 2,355 கணக்குகளை எந்த காரணமும் சொல்லாமல், மறு உத்தரவு வரும் வரை ஒரு மணி நேரத்துக்கும் முடக்கவேண்டும் எனத் தெரிவித்து இருந்தது.


இது தொடர்பாக மத்திய அரசு அதிகாரிகள் கூறியதாவது: கடந்த 3ம் தேதி முடக்கம் தொடர்பாக எந்த உத்தரவையும் மத்திய அரசு பிறப்பிக்கவில்லை. ராய்ட்டர்ஸ் மற்றும் ராய்ட்டர்ஸ் வோர்ல்ட் உள்ளிட்ட எந்த சர்வதேச சேனல்களை முடக்கும் எண்ணம் அரசுக்கு இல்லை. அந்த இரண்டு பக்கங்களையும் முடக்கம் தொடர்பாக அறிந்த உடன் அதனை நீக்க வேண்டும் என எக்ஸ் நிறுவனத்துக்கு கடிதம் எழுதினோம். இது தொடர்பாக அந்த நிறுவனத்துடன் தொடர்ந்து தொடர்பில் இருந்தோம். இது தொடர்பான தொழில்நுட்பங்களை தேவையில்லாமல் அந்த நிறுவனம் பயன்படுத்தியதுடன், தடையை நீக்கவில்லை. பல நினைவூட்டல்களுக்கு பிறகு, 21 மணி நேரம் கடந்த பிறகே தடையை நீக்கியது. இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

Advertisement