53 சதவீத 6ம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டுமே 10ம் வாய்ப்பாடு தெரிகிறது!

12

புதுடில்லி : நாடு முழுதும் மத்திய, மாநில அரசுகள் மற்றும் தனியார் பள்ளிகளில் ஆறாம் வகுப்பு படிக்கும் மாணவர்களில், 53 சதவீதம் பேருக்கு மட்டுமே, 10ம் வாய்ப்பாடு வரை சொல்லும் திறன் இருப்பதாக மத்திய கல்வி அமைச்சகம் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.


நாடு முழுதும், மூன்று, ஆறு மற்றும் ஒன்பதாம் வகுப்பு மாணவர்களின் கல்வித் திறன் குறித்து, மத்திய கல்வி அமைச்சகம் ஆய்வு ஒன்றை நடத்தியது. கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் இந்த ஆய்வு நடத்தப்பட்டது.



மத்திய, மாநில அரசுகள், தனியார் மற்றும் அரசு உதவி பெறும் 74,229 பள்ளிகளில் ஆய்வு நடத்தப்பட்டது. 21 லட்சத்து, 15 ஆயிரத்து, 22 மாணவர்கள், 2.70 லட்சம் ஆசிரியர்கள் ஆய்வில் பங்கேற்றனர்.



நாடு முழுதும், 36 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில், 781 மாவட்டங்களில் உள்ள பள்ளிகள் பங்கேற்றன. அந்த ஆய்வு முடிவின் விபரம்:



மூன்றாம் வகுப்பு படிக்கும் 55 சதவீத மாணவர்கள் மட்டுமே, ஒன்று முதல் 99 வரை, ஏறு மற்றும் இறங்கு வரிசையில் சரியாக வரிசைப்படுத்துகின்றனர். 58 சதவீத மாணவர்களால் மட்டுமே இரண்டு இலக்க கூட்டல் மற்றும் கழித்தல் கணக்குகளை சரியாக போட முடிகிறது.



மேலும், ஆறாம் வகுப்பு படிக்கும் மாணவர்களில் 53 சதவீதம் பேருக்கு மட்டுமே 10ம் வாய்ப்பாடு வரை தவறின்றி சொல்லும் திறன் உள்ளது.



மத்திய அரசு பள்ளியை சேர்ந்த மூன்றாம் வகுப்பு மாணவர்கள் கணக்கு பாடத்தில் குறைந்த திறனுடன் உள்ளனர்.



மாநில அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளியில் படிக்கும் ஆறாம் வகுப்பு மாணவர்கள் கணக்கு பாடத்தில் பலவீனமாக உள்ளனர். மத்திய அரசு பள்ளிகளில் படிக்கும் ஒன்பதாம் வகுப்பு மாணவர்கள் அனைத்து பாடங்களிலும் சிறப்பான திறனை வெளிப்படுத்தினர்.



குறிப்பாக, மொழிப் பாடத்தில் சிறந்து விளங்குகின்றனர். தனியார் பள்ளி மாணவர்கள் அறிவியல் மற்றும் சமூக அறிவியலில் சிறந்து விளங்கினாலும் கணிதத்தில் குறைந்த மதிப்பெண் பெறுகின்றனர். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Advertisement