மீஞ்சூரில் நீர்நிலைகள் பராமரிப்பில் அலட்சியம் நிலத்தடி நீர் பாதுகாப்பில் பேரூராட்சி நிர்வாகம் விழிக்குமா?

மீஞ்சூர்:மீஞ்சூர் பேரூராட்சியின் அலட்சியத்தால் ஏரி, குளம் உள்ளிட்ட நீர்நிலைகள் செடிகள் வளர்ந்தும், ஆகாயத்தாமரைகள் சூழ்ந்தும், கால்வாய்கள் பராமரிப்பு இன்றி இருப்பதால், நிலத்தடி நீர் பாதுகாப்பு கேள்விக்குறியாகி வருகிறது. எதிர்கால திட்டமிடல் இல்லாமல் மெத்தனமாக இருக்கும் நிர்வாகத்தின் மீது சமூக ஆர்வலர்கள் அதிருப்தியில் உள்ளனர்.
திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் பேரூராட்சிக்கு உட்பட்ட 18 வார்டுகளில், 7,554 குடியிருப்புகள், 1,500க்கும் மேற்பட்ட வணிக நிறுவனங்கள் உள்ளன.
மீஞ்சூர் பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் நிலத்தடி நீர் உவர்ப்பாக உள்ளது. ஆழ்துளை மோட்டார்கள் மூலம் பெறப்படும் தண்ணீரை குடிக்க, சமைக்க பயன்படுத்த முடியாத நிலை உள்ளது.
இங்குள்ள மக்களின் குடிநீர் தேவைக்காக, 5 - 8 கி.மீ., தொலைவில் உள்ள சீமாவரம் மற்றும் வன்னிப்பாக்கம் பகுதிகளில், கொசஸ்தலை ஆற்றின் கரையோரங்களில் ஆழ்துளை கிணறுகள் அமைத்து, தினமும், 20 லட்சம் லிட்டர் குடிநீர் வழங்கப்படுகிறது.
இது போதுமானதாக இல்லாததால், குடிநீர் தட்டுப்பாடு நிலவுகிறது. டிராக்டர் மற்றும் லாரிகளில் கொண்டு வந்து விற்பனை செய்யப்படும் தண்ணீரை மக்கள் வாங்கி பயன்படுத்துகின்றனர். பிளாஸ்டிக் கேன்களில் அடைத்து விற்பனை செய்யப்படும் குடிநீரையும் வாங்குகின்றனர்.
மீஞ்சூர் பகுதியில் நிலத்தடி நீரின் உவர்ப்பு தன்மை அதிகரித்து வரும் நிலையில், இங்குள்ள நீர்நிலைகளை பராமரிப்பதில் பேரூராட்சி நிர்வாகம் அலட்சியம் காட்டி வருகிறது.
அரியன்வாயல், எடப்பாளையம், புதுப்பேடு என, பல்வேறு பகுதிகளில், ஏழு குளங்கள் உரிய பராமரிப்பு இன்றி உள்ளன.
குளங்களில் ஆகாயத்தாமரை வளர்ந்து, செடி கொடிகள் சூழ்ந்து இருப்பதால், குடியிருப்புவாசிகளின் குப்பை தொட்டியாகவும் மாறியுள்ளன.
அதேபோல, சூர்யா நகர் பகுதியை ஒட்டி, 50 ஏக்கர் பரப்பில் ஏரி உள்ளது. இதற்கு, கொசஸ்தலை ஆற்றில் இருந்து மழைநீர் வருவதற்கான கால்வாய் உள்ளது. இந்த ஏரி மற்றும் கால்வாய் துார்வாரப்படாமல் கிடக்கிறது.
குளங்களை சீரமைப்பது, கால்வாய்களை துார்வாருவது, மழைநீரை சேமித்து நிலைத்தடி நீரை பாதுகாப்பது என, நீர்நிலைகள் பராமரிப்பதில் மீஞ்சூர் பேரூராட்சி நிர்வாகம் எந்தவொரு நடவடிக்கையும் எடுக்காமல் அலட்சியம் காட்டி வருவதாக, சமூக ஆர்வலர்கள் அதிருப்தியை தெரிவிக்கின்றனர்.
இதுகுறித்த சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:
எட்டு கி.மீ., தொலைவில் இருந்து தண்ணீர் கொண்டு வரப்படும் நிலையில், குழாய் உடைப்பு, மோட்டார் பழுது உள்ளிட்டவைகளால் சீரான வினியோகம் இருப்பதில்லை. டிராக்டர்களில் கொண்டு வந்து விற்பனை செய்யப்படும் தண்ணீரை வாங்கும் நிலை உள்ளது.
மீஞ்சூர் பகுதியில் உள்ள குளங்களை உரிய முறையில் பராமரித்தால், அவற்றில் தேங்கும் தண்ணீர் மக்களின் பல்வேறு தேவைகளுக்கு பயன்படுத்த முடியும். மேலும், நீர்நிலைகளின் அருகே ஆழ்துளை மோட்டார்கள் அமைத்து, குடிநீர் பெற முடியும்.
மீஞ்சூர் பேரூராட்சியில் சாலை, கால்வாய் என, பல்வேறு திட்டப் பணிகளுக்கு பல கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்படுகிறது. அதே சமயம், நீர்நிலைகளை பராமரித்து, நிலத்தடி நீரை பாதுகாப்பதற்கு தேவையான நிதி ஒதுக்கீடு செய்வதில் அலட்சியம் காட்டுகிறது.
மீஞ்சூரில் நிலத்தடி நீரின் உவர்ப்புத்தன்மையை குறைக்க வேண்டுமானால், நீர்நிலைகளை பராமரிப்பதுடன், ஒவ்வொரு வீட்டிலும் மழைநீர் சேமிப்பு கட்டமைப்பு முறைப்படுத்த வேண்டும். இனியும் உறக்கம் கொள்ளாமல், மீஞ்சூர் பேரூராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
மேலும்
-
10ல் குரு பவுர்ணமியை முன்னிட்டு தி.மலை கோவிலில் சிறப்பு ஏற்பாடு
-
ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் ஜேஷ்டாபிஷேகம்
-
கண்டதேவி சொர்ண மூர்த்தீஸ்வரர் கோயிலில் ஆனித்தேரோட்டம்
-
நெல்லை- சென்னை வந்தே பாரத் ரயிலில் எழுந்த புகை: நடு வழியில் நிறுத்தம்
-
ஆப்பிள் நிறுவனத்தில் இந்தியருக்கு உயர்பதவி!
-
நாடு தழுவிய வேலைநிறுத்தம்: தமிழகத்தில் பஸ்கள் வழக்கம் போல் இயக்கம்