இ.எஸ்.ஐ., சட்ட பாதுகாப்பு: வந்தாச்சு 'ஸ்ப்ரீ-2025' திட்டம்
திருப்பூர்; தொழிற்சாலைகள் மற்றும் தொழிலாளர்களை, இ.எஸ்.ஐ., திட்டத்தில் இணைத்து, சட்ட ரீதியான சமூக பாதுகாப்பை வழங்கும், 'ஸ்ப்ரீ -2025' திட்டம் டிச., மாதம் வரை அமலில் இருக்கும் என, இ.எஸ்.ஐ., திட்ட அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இமாசலப்பிரதேசம், சிம்லாவில், 196வது இ.எஸ்.ஐ., கார்ப்ரேஷன் கூட்டம் நடந்தது. மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சர் மன்சுக் மண்டாவியா தலைமை வகித்தார். கூட்டத்தில், தொழிலாளர் அரசுக் காப்பீட்டுக் கழகம் (இ.எஸ்.ஐ.சி.,) சார்பில் , முதலாளிகள் மற்றும் ஊழியர்களின் பதிவை ஊக்குவிக்கும் திட்டத்துக்கு (ஸ்ப்ரீ -2025) ஒப்புதல் அளிக்கப்பட்டது.
இத்திட்டத்தில், தொழிலாளர் அரசுக் காப்பீட்டுக் கழகத்தால் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்கள் மற்றும் ஊழியர்களின் பதிவு ஊக்குவிக்கப்படும். இ.எஸ்.ஐ., சட்டத்தின் சமூக பாதுகாப்பை விரிவுபடுத்தும் நோக்கில் செயல்படுத்தப்படுகிறது.
டிச., 31 வரை அவகாசம்
ஜூலை 1ம் தேதி துவங்கி, டிச., 31 வரை இத்திட்டம் அமலில் இருக்கும். இந்திட்டத்தில், பதிவு செய்யப்படாத நிறுவனங்கள் மற்றும் ஊழியர்களின் ஆவண ஆய்வுகளையும், கடந்த கால நிலுவைத் தொகைகளுக்கான கோரிக்கை இல்லாமல் பதிவு செய்யும் வாய்ப்பை வழங்குகிறது.
இத்திட்டம் தொடர்பாக, இ.எஸ்.ஐ., உயர் அதிகாரிகள், வெளியிட்டுள்ள அறிக்கை:
நிறுவன உரிமையாளர்கள், தங்கள் தொழிற்சாலைகள் மற்றும் ஊழியர்களை, (ESIC /Shram Suvidha / MCA) இணையதளம் மூலம் டிஜிட்டல் முறையில் பதிவு செய்யலாம்.
பதிவு செய்யப்படும் தேதியே, இ.எஸ்.ஐ., திட்டத்தில், தொழிற்சாலைகள் மற்றும் நிறுவனங்கள் பதிவு செய்த தேதியாக எடுத்துக்கொள்ளப்படும்.
பதிவு செய்வதற்கு முந்தைய காலங்களுக்கு எந்தவொரு மாதாந்திர பங்களிப்பும் செலுத்த வேண்டியது இல்லை. அதுபோல, அந்த காலங்களுக்கு, இ.எஸ்.ஐ., திட்டப் பலன்களும் வழங்கப்படாது.
பதிவு காலத்துக்கு முன்புள்ள ஆவணங்களை கோருவதோ அதனை ஆய்வுக்கு உட்படுத்துவதோ நடைபெறாது.
இ.எஸ்.ஐ., சட்டத்தில் ஏற்கனவே பதிவு செய்யாததால், அபராதம் செலுத்த வேண்டிய அச்சம் இல்லை; பதிவு செயல்முறையை எளிதாக்குவதன் மூலம், தன்னார்வ இணக்கத்தை ஊக்குவிக்கிறது.
'ஸ்ப்ரீ' திட்டத்துக்கு முன், குறிப்பிட்ட காலத்துக்குள் தொழிற்சாலைகள் மற்றும் நிறுவனங்களை பதிவு செய்யாமல் இருப்பது, சட்ட நடவடிக்கை மற்றும் காலாவதியான நிலுவைத் தொகை, அபாரதத் தொகை வசூலிக்கவும் வாய்ப்புள்ளது. இருப்பினும் 'ஸ்ப்ரீ -2025' திட்டம், இந்த தடைகளை நிவர்த்தி செய்து, விடுபட்ட தொழிற்சாலைகள், நிறுவனங்கள் மற்றும் தொழிலாளர்களை இ.எஸ்.ஐ., திட்டத்துக்குள் கொண்டு வந்து, பரவலான சமூக பாதுகாப்பை உறுதி செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
'ஸ்ப்ரீ -2025' திட்டத்தின் துவக்கம் என்பது, விரிவான சமூகப் பாதுகாப்பை முன்னெடுக்கும் நடவடிக்கை; பதிவு செயல்முறை எளிதாக்குவது; காலாவதியான நிலுவைத் தொகை, அபாரதத் தொகை போன்றவற்றிலிருந்து விலக்கு அளிப்பதன் மூலமாக, தொழிலாளர்கள், இ.எஸ்.ஐ., சட்டப்படியான, அடிப்படை மருத்துவம் மற்றும் சமூக நலன்களைப் பெறுவது உறுதி செய்யப்படுகிறது.
இ.எஸ்.ஐ., திட்டம் தொடர்பான கூடுதல் விவரங்களுக்கு, அருகில் உள்ள இ.எஸ்.ஐ., கிளை அலுவலகம், சார் மண்டல அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம். கூடுதல் விவரங்களுக்கு, www.esic.gov.in என்ற இணையதளத்தை பார்வையிடலாம்.
இவ்வாறு, அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும்
-
மதமாற்ற கும்பலின் மூளையாக செயல்பட்டவர் உ.பி.,யில் கைது
-
டில்லியில் நவம்பர் 1 முதல் பழைய வாகனத்திற்கு மீண்டும் தடை
-
விமானத்தை மொய்த்த தேனீக்கள்
-
53 சதவீத 6ம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டுமே 10ம் வாய்ப்பாடு தெரிகிறது!
-
பேய் விரட்டுவதாக தாக்கியதில் பெண் மரணம்: மந்திரவாதி கைது
-
கடைகளை மறைக்கும் பேனர்களால் அவதி