டில்லியில் நவம்பர் 1 முதல் பழைய வாகனத்திற்கு மீண்டும் தடை

1

புதுடில்லி : டில்லியில் பழைய வாகனங்களுக்கு எரிபொருள் வழங்குவதற்கான தடையை, வரும் நவ., 1 முதல் மீண்டும் அமல்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.


டில்லியில் காற்று மாசு அதிகரித்ததை அடுத்து, 10 ஆண்டு பழமையான டீசல் வாகனங்களுக்கும், 15 ஆண்டுகள் பழமையான பெட்ரோல் வாகனங்களுக்கும் எரிபொருள் வழங்க தடை விதிக்கப்பட்டது. அவ்வாறு பயன்படுத்தும் வாகனங்களை பறிமுதல் செய்ய,
காற்று தர மேலாண்மை கமிஷன் உத்தரவிட்டது.


இது, கடந்த 1ம் தேதி அமலுக்கு வந்தது. அதன்படி, தலைநகர் முழுதும் உள்ள 400க்கும் மேற்பட்ட பெட்ரோல் பங்க்குகளில், மாசுக் கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள், போலீசார், நகராட்சி அதிகாரிகள் குவிந்தனர்.



இரண்டு நாட்களில், 200க்கும் மேற்பட்ட பழைய வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. அரசின் இந்த நடவடிக்கைக்கு வாகன ஓட்டிகள், அரசியல் கட்சியினர் மற்றும் சமூக அமைப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.



இதையடுத்து, இந்த நடைமுறை நிறுத்தி வைக்கப்படுவதாக டில்லி அரசு கடந்த 3ம் தேதி அறிவித்தது.



இந்நிலையில், இது தொடர்பாக காற்று தர மேலாண்மை கமிஷன் அதிகாரிகள் நேற்று ஆலோசனை நடத்தினர்.



இதையடுத்து, டில்லி - என்.சி.ஆர்., எனப்படும் டில்லி, குருகிராம், பரிதாபாத், நொய்டா, காஜியாபாத், சோனிபட் ஆகிய நகரங்களில் நவ., 1ம் தேதி முதல் பழைய வாகனங்களுக்கு எரிபொருள் வழங்குவதற்கான தடையை மீண்டும் அமல்படுத்த முடிவுசெய்யப்பட்டது.

Advertisement