காரைக்காலில் நாளை மாங்கனி திருவிழா

காரைக்கால் : காரைக்கால் அம்மையார் ேகாவிலில் மாங்கனி திருவிழாவை முன்னிட்டு பரமதத்த செட்டியார் மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சி நேற்று நடந்தது.

காரைக்கால் அம்மையாரின் வாழ்க்கை வரலாற்றை விவரிக்கும் மாங்கனி திருவிழா நேற்று விக்னேஸ்வர பூஜையுடன் துவங்கியது. பரமதத்த செட்டியார் பட்டுவேட்டி முத்து மாலைகளுடன் மாப்பிள்ளை அலங்காரத்தில், ஆற்றங்கரை சித்தி விநாயகர் கோவிலில் இருந்து ஊர்வலமாக காரைக்கால் அம்மையார் கோவிலுக்கு இரவு அழைத்து வரப்பட்டார். அமைச்சர் திருமுருகன், கோவில் நிர்வாக அதிகாரி அருணகிரிநாதன், தனி அதிகாரி காளிதாசன் உள்ளிட்ட திரளானோர் பங்கேற்றனர்.

இன்று (9ம் தேதி) புனிதவதியார் தீர்த்த குளத்தில் நீராடும் நிகழ்ச்சி, காலை 8:00 மணிக்கு மணமகன் பரமதத்தர் குதிரை வாகனத்தில் திருக்கல்யாண மண்டபத்தில் எழுந்தருளும் நிகழ்ச்சி, காலை 10:30 மணிக்கு காரைக்கால் அம்மையார் - பரமதத்தருக்கு திருக்கல்யாணம் நடக்கிறது.

நாளை அதிகாலை 3:00 மணிக்கு பிஷாடணமூர்த்தி மற்றும் பஞ்ச மூர்த்திக்களுக்கு மகா அபிஷேகம், காலை 7:30 மணிக்கு பரமசிவன் அடியார் கோலத்துடன் பவழக்கால் விமானத்தில் திருவீதியுலா நடக்கிறது. அப்போது, பக்தர்கள் வீடுகளில் இருந்து மாங்கனிகளை வீசும் நிகழ்ச்சி நடக்கிறது. மாங்கனித் திருவிழாவை முன்னிட்டு நாளை 10ம் தேதி அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்க வேண்டும் என்று நாஜிம் கோரிக்கை விடுத்துள்ளார்.

Advertisement