எளாவூர் ரயில்வே மேம்பாலத்தில் வளர்ந்த செடிகளால் இடையூறு

கும்மிடிப்பூண்டி:மாநில நெடுஞ்சாலை துறை பராமரிப்பில் உள்ள எளாவூர் ரயில்வே மேம்பாலத்தில், பராமரிப்பு பணிகளை மேற்கொள்ளாததால் செடிகள் வளர்ந்து, வாகன ஓட்டிகளுக்கு இடையூறு ஏற்படுத்துகிறது.

கும்மிடிப்பூண்டி அடுத்த எளாவூரில், சுண்ணாம்புகுளம் மார்க்கத்தில் ரயில்வே மேம்பாலம் உள்ளது. இந்த மேம்பாலத்தை மாநில நெடுஞ்சாலை துறையினர் பராமரித்து வருகின்றனர்.

தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் மேம்பாலம் வழியாக செல்கின்றன. மேம்பாலத்தின் ஓரம் மண்ணை அகற்றாததால், அதில் செடி, கொடிகள் வளர்ந்துள்ளன.

இந்த செடிகள், வாகன ஓட்டிகளுக்கு இடையூறாக இருப்பதால் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகின்றனர்.

குறிப்பாக, கனரக வாகனங்கள் எதிரெதிரே செல்ல முடியாத நிலை இருப்பதாக மக்கள் தெரிவிக்கின்றனர்.

எனவே, வாகன ஓட்டிகளுக்கு இடையூறாக இருக்கும், செடி கொடிகளை அகற்ற வேண்டும்.

எளாவூர் ரயில்வே மேம்பாலத்தில் முறையாக பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள, மாநில நெடுஞ்சாலைத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement