ரயில், ரோடு மறியலில் ஈடுபட்ட 1096 பேர்

தேனி: விலை வாசி உயர்வை கட்டுப்படுத்த வேண்டும் உள்ளிட்ட 17 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி 13 தொழிற்சங்கங்கத்தினர் தேனி ரயில்வே கேட்டில் மறியலில் ஈடுபட்டனர். மாவட்டம் முழுவதும் 10 இடங்களில் நடந்த ரோடு மறியலில் 381 பெண்கள், 715 ஆண்கள் என மொத்தம் 1096 பேரை போலீசார் கைது செய்து, மாலையில் விடுவித்தனர்.

நேற்று நடந்த நாடு தழுவிய வேலை நிறுத்த போராட்டத்தில் தேனி பெரியகுளம் ரோட்டில் உள்ள ரயில்வே கேட்டில் மதுரை போடி ரயில் வருவதற்கு முன் தொழிற்சங்கத்தினர் மறியலில் ஈடுபட்டனர். மார்க்சிஸ்ட் கம்யூ., மத்திய குழுஉறுப்பினர் பாலபாரதி தலைமை வகித்தார். சி.ஐ.டி.யு., மாவட்டச் செயலாளர் ராமச்சந்திரன், போக்குவரத்து சங்க பொதுச் செயலாளர் ராமநாதன், விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளர் கண்ணன், சி.ஐ.டி.யு., மாவட்டத் தலைவர் ஜெயபாண்டி உள்ளிட்ட 244 பேர், ரயில்வே கேட்டில் அமர்ந்து மறியல் செய்தனர்.

இதனால் மதுரையில் இருந்து தேனிக்கு 9:35க்கு வர வேண்டிய ரயில் 9:51க்கு தேனி வந்தது. 16 நிமிடங்கள் ரயில் தாமதமாக சென்றதால் பயணிகள் பாதிக்கப்பட்டனர்.

நேற்றைய மறியலால் பெரியகுளம் ரோட்டில் இரு மார்க்கத்திலும் காலை பள்ளி, அலுவலகங்களுக்கு செல்வோர், அரசு, பயணிகளுக்கு பாதிப்பு ஏற்பட்டது. தேனி டி.எஸ்.பி., தேவராஜ், ரயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டர் நிஷாந்த், தேனி இன்ஸ்பெக்டர்கள் ஜவஹர், ராமலட்சுமி தலைமையிலான போலீசார் மறியலில் ஈடுபட்டவர்களை கைது செய்தனர்.உத்தமபாளையத்தில் 28 பேர், கடமலைக்குண்டில் 46 பேர், போடி டவுன் 93 பேர், சின்னமனுாரில் 163 பேர், தேவாரத்தில் 83 பேர், ஆண்டிபட்டியில் இரண்டு இடங்களில் 147 பேர், பெரியகுளத்தில் 70 பேர், கம்பம் வடக்கு 222 பேர் என மொத்தம் 1096 பேரை போலீசார் கைது செய்து அனைவரையும் மாலையில் விடுவித்தனர்.

வழக்கம்போல் இயங்கிய அரசு அலுவலகங்கள்



தேசிய அளவில் அறிவிக்கப்பட்ட வேலை நிறுத்த போராட்டம் நடந்தாலும் நேற்று தேனி மாவட்டத்தில் உள்ள அரசுத்துறை அலுவலகங்கள் வழக்கம் போல் செயல்பட்டன. மாவட்டத்தில் 52 அரசுத்துறைகளில் தற்போது பணியில் 12,238 பேர் உள்ளனர். இவர்களில் நேற்று 507 பேர் முறைப்படி கடிதம் வழங்கியும், 383 பேர் முன்னறிவிப்பின்றியும் விடுப்பு எடுத்தனர். அதிகபட்சமாக வருவாய்த்துறை, கல்வித்துறையில் தலா நுாற்றுக்கும் மேற்பட்டோர் விடுப்பு எடுத்திருந்தனர்.

ஆர்ப்பாட்டம்



கலெக்டர் அலுவலகம் முன் ஜாக்டோ ஜியோ சார்பில் வேலைநிறுத்த ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட ஒருங்கிணைப்பாளர் தாஜூதீன் தலைமை வகித்தார். நிர்வாகிகள் அன்பழகன், மோகன், பெரியசாமி, ராம்குமார், முத்துகுமார், நாகராஜன், கிருஷ்ணசாமி, செல்லதுரை உள்ளிட்டோர் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர்.

Advertisement