பொன்மாணிக்கவேல் வழக்கு குற்றப்பத்திரிகை தாக்கல் உயர்நீதிமன்றத்தில் தகவல்

மதுரை : சிலை கடத்தல் மன்னன் தீனதயாளனுக்கு உதவியதாக முன்னாள் ஐ.ஜி.,பொன்மாணிக்கவேல் மீது பதிந்த வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக, சி.பி.ஐ., தரப்பில் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் தெரிவிக்கப்பட்டது.


தமிழக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐ.ஜி.,யாக பொன் மாணிக்கவேல் பணிபுரிந்தார் (2018ல் ஓய்வு பெற்றார்). சர்வதேச சிலை கடத்தல்காரர் தீனதயாளனை கைது செய்தார். அவரது வாக்குமூலம் அடிப்படையில், திருவள்ளூரில் டி.எஸ்.பி.,யாக பணிபுரிந்த காதர்பாஷா மீது பொன்மாணிக்கவேல் வழக்கு பதிந்தார். காதர்பாஷா,'தீனதயாளனை வழக்கு ஒன்றில் தப்பிக்க வைக்க என் மீது பொய் வழக்கு பதியப்பட்டது. விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்,' சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு செய்தார். அந்நீதிமன்றம்,'சி.பி.ஐ.,விசாரித்து முகாந்திரம் இருக்கும்பட்சத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என உத்தரவிட்டது. பொன்மாணிக்கவேல் மீது சி.பி.ஐ.,போலீசார் வழக்கு பதிந்தனர். ஆரம்ப கட்ட விசாரணை அறிக்கையை தனக்கு வழங்க சி.பி.ஐ.,க்கு உத்தரவிட வேண்டும். சி.பி.ஐ.,பதிந்த வழக்கை ரத்து செய்ய வேண்டும் என பொன்மாணிக்கவேல் உயர்நீதிமன்றக் கிளையில் மனு தாக்கல் செய்தார்.



நீதிபதி ஆர்.என்.மஞ்சுளா விசாரித்தார்.
சி.பி.ஐ.,தரப்பு வழக்கறிஞர் முகைதீன் பாஷா: மதுரை கூடுதல் தலைமை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.



மனுதாரர் தரப்பு வழக்கறிஞர் பொழிலன்: குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்திருந்தாலும் வழக்கை ரத்து செய்யுமாறு கோர உரிமை உண்டு.
இவ்வாறு விவாதம் நடந்தது. நீதிபதி ஜூலை 16 க்கு ஒத்திவைத்தார்.

Advertisement