கிராம சாலை திட்டத்தில் மத்திய அரசிடம் பெற்ற ரூ.5,886 கோடி ரூபாய் நிதி எங்கே; அண்ணாமலை

11

சென்னை: 'மத்திய அரசின் கிராம சாலைகள் திட்டத்தின் கீழ், தமிழகம், 5,886 கோடி ரூபாய் பெற்றும், பல மாவட்ட கிராமங்களில் சாலை அமைக்கப்படவில்லை' என, தமிழக பா.ஜ., முன்னாள் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

அவரது அறிக்கை:



நாகை மாவட்டம் ஆழியூரை அடுத்துள்ள கடம்பரவாழ்க்கை கிராமத்தில், சாலை வசதி இல்லாமல், மக்கள் வயல் வரப்பு, ஒற்றையடி பாதையை பயன்படுத்தி வருகின்றனர். பள்ளிகளுக்கு செல்லும் மாணவர்கள் துவங்கி, மருத்துவ அவசர சிகிச்சைக்கு செல்லும் மக்கள் வரை, இந்த ஒற்றையடி பாதையையே பயன்படுத்த வேண்டி இருக்கிறது.



மழைக் காலங்களில் பாம்பு உள்ளிட்ட விஷப்பூச்சிகள் தாக்குதலுக்கும், மக்கள் உள்ளாக நேர்கிறது. மத்திய அரசின் கிராம சாலைகள் திட்டத்தின் கீழ் இதுவரை தமிழகம், 5,886 கோடி ரூபாயை பெற்றிருக்கிறது. ஆனால், தமிழகம் முழுதும், பல மாவட்ட கிராமங்களில், சாலைகள் அமைக்கப்படவில்லை. தி.மு.க., ஆட்சிக்கு வந்ததும், மத்திய அரசு திட்டத்தின் பெயரை மாற்றி, 'முதல்வரின் கிராம சாலைகள் திட்டம்' என்று, வெறும் அறிவிப்பு மட்டும் வெளியிட்டனர்.


இதுவரை, இந்த திட்டத்தின் கீழ், எந்தெந்த கிராமங்களில், சாலைகள் அமைக்கப்பட்டன என, தமிழக பா.ஜ., சார்பில், வெள்ளை அறிக்கை கேட்டு, இரண்டு ஆண்டுகள் ஆகின்றன. மத்திய அரசிடம் பெற்ற நிதி எங்கே, நீங்கள் ஒதுக்கிய நிதி எங்கே. முதல்வர் ஸ்டாலினின் கையாலாகாத ஆட்சிக்கு, தமிழக கிராமங்களின் அவலநிலையே சாட்சி. மக்களின் அடிப்படை தேவைகளை கூட நிறைவேற்றாமல், கடந்த நான்கு ஆண்டுகளாக, தினமும் ஒருநாள் கூத்துக்காக வேஷம் தரித்து ஆடும் நாடகத்தை, ஸ்டாலின் எப்போது நிறுத்த போகிறார். கிராமங்களுக்கு சாலை வசதி ஏற்படுத்தி கொடுப்பதை விட முக்கியமா, முதல்வரின் விளம்பர நாடகங்கள். அவரின், வேஷங்களை மக்கள் விரைவில் கலைப்பர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement