பரந்துார் ஏர்போர்ட் திட்டத்திற்கு பத்திரப்பதிவு துவக்கம்; நிலம் அளித்த 19 பேருக்கு ரூ.9 கோடி இழப்பீடு

1

காஞ்சிபுரம்: பரந்துார் விமான நிலைய திட்டத்திற்காக கையகப்படுத்திய நிலங்களுக்கு, காஞ்சிபுரத்தில் பத்திரப்பதிவு துவங்கியுள்ளது. முதற்கட்டமாக நேற்று ஐந்து கிராமங்களைச் சேர்ந்த 19 நில உரிமையாளர்கள் வழங்கிய 17 ஏக்கர் நிலங்களுக்கு, 9.22 கோடி ரூபாய் இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது.


எதிர்கால தேவை கருதி, சென்னையின் இரண்டாவது விமான நிலையம், காஞ்சிபுரம் மாவட்டம், பரந்துாரில், 29,150 கோடி ரூபாயில், 5,320 ஏக்கர் பரப்பளவில் அமைகிறது.


இதற்காக, ஸ்ரீபெரும்புதுார் மற்றும் காஞ்சிபுரம் ஆகிய இரு தாலுகாக்களில், 20 கிராமங்களில் இருந்து நிலம் பயன்படுத்தப்பட உள்ளது.


அரசு நிலம் போக, பரந்துார் சுற்றுப்புற கிராமங்களில் இருந்து, 3,750 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட உள்ளது. இதில், 13 கிராமங்களில் விமான நிலைய திட்டமும், பிற கிராமங்களில் அணுகு சாலைகளும் அமைய உள்ளன.



பரந்துாரில் விமான நிலையம் அமைவதாக அறிவிப்பு வெளியானது முதல், இத்திட்டத்தை எதிர்த்து, ஏகனாபுரம் கிராமத்தினர் 1,000 நாட்களை கடந்தும் போராட்டம் நடத்தினர். அரசு சமாதான பேச்சு நடத்தியது.


இந்நிலையில், விமான நிலையம் அமைவதற்கான பூர்வாங்க பணிகளை, 'டிட்கோ' எனும் தமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறுவனம் மேற்கொண்டு வருகிறது.
Latest Tamil News

நிலம் கையகப்படுத்த மூன்று மாவட்ட வருவாய் அலுவலர்கள் தலைமையின் கீழ், 21 குழுக்கள் அமைக்கப்பட்டு, அதற்கான பணிகள் நடந்தன. மறு குடியமர்வு செய்ய தேவையான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகின்றன.


இந்நிலையில், நிலங்களுக்கான இழப்பீடு தொகையை அறிவித்து, ஜூன் இறுதியில், தமிழக அரசு அரசாணை வெளியிட்டது.


இழப்பீடு தொகையை அரசு அறிவித்த பின், மாவட்ட அளவிலான கூட்டம், கலெக்டர் கலைச்செல்வி தலைமையில் சமீபத்தில் நடந்தது. நில உரிமையாளர்கள் பலர் பங்கேற்றனர்.


அப்போது, பரந்துார், நெல்வாய், பொடவூர், அக்கமாபுரம், வளத்துார் ஆகிய ஐந்து கிராமங்களைச் சேர்ந்த 19 பேர், தங்கள் நிலங்களை பரந்துார் விமான நிலைய திட்டத்திற்கு வழங்க சம்மதம் தெரிவித்தனர்.


இந்நிலையில், காஞ்சிபுரம் இணை சார் - பதிவாளர் அலுவலகத்தில், தங்களின் 17 ஏக்கர் நிலங்களை, தொழில் வளர்ச்சி நிறுவனத்திற்கு, வருவாய் துறை அதிகாரிகள் முன்னிலையில் நேற்று, 19 பேரும் பத்திரப்பதிவு செய்து கொடுத்தனர்.

இதுகுறித்து, காஞ்சிபுரம் மாவட்ட உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது:



விமான நிலைய திட்டத்திற்கு நிலத்தை வழங்க விருப்பம் தெரிவித்த முதல் 19 பேருக்கு, 9.22 கோடி ரூபாய் இழப்பீடு வழங்கப்பட்டது.


அதுவும், அனைவருக்கும் ஒரே நாளில், அவரவர் வங்கி கணக்குகளில் வரவு வைக்கப்பட்டு, பத்திரப்பதிவு முடிக்கப்பட்டு உள்ளது.



'பிளாட் ரேட்' எனும் நிலையான நிலமதிப்பு முறையில் கணக்கிடப்பட்டு, அவர்களுக்கு இழப்பீடு வழங்கப்பட்டு உள்ளது.


விமான நிலைய திட்டத்தில் மொத்தம், 5,800 நில உரிமையாளர்கள் உள்ளனர். அவர்களுக்கும் அடுத்தடுத்து கூட்டம் நடத்தப்பட்டு, இழப்பீடு வழங்கப்படும்.


உரிமையாளர்களின் நிலம் முழுமையாக கையகப்படுத்தப்பட்டால், பத்திரப்பதிவு செய்யப்பட்டு, அவர்களுடைய பத்திரம் வாங்கி கொள்ளப்படும்.


பகுதி அளவு கையகப்படுத்தப்பட்டால், தனியாக பட்டா கொடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

@block_B@

நிலையான நில மதிப்பு

அரசின் செயல் திட்டங்களுக்கு நிலத்தை கையகப்படுத்தும்போது, நில எடுப்பு சட்டத்தின்படியும், சமரச பேச்சு மூலமாகவும் வழிகாட்டி மதிப்பைவிட கூடுதல் இழப்பீடு வழங்கப்படும். ஆனால், நிலையான நிலமதிப்பு மூலம், மேலும் கூடுதல் இழப்பீடு தொகை கிடைக்கும். இந்த நிலையான நிலமதிப்பு கணக்கிடப்பட்டு, நில உரிமையாளர்களுக்கு இழப்பீடு வழங்கப்பட உள்ளது. இந்த கிராமங்களில் அரசின் வழிகாட்டி மதிப்பு குறைவாக இருப்பதால், அவர்களுக்கு அதிக இழப்பீடு கிடைக்க வேண்டும் என்பதற்காக, பரந்துார் உள்ளிட்ட கிராமங்கள், நிலையான நில மதிப்பில் தேர்வு செய்யப்பட்டுள்ளன. நில மதிப்பு, ஏற்கனவே அதிகமாக உள்ள கிராமங்களுக்கு, இந்த நிலையான நில மதிப்பில் இழப்பீடு வழங்கப்படாது. விமான நிலைய திட்டத்திற்காக பரந்துார் ஏ, பரந்துார் பி, தண்டலம், பொடவூர், தொடூர், நெல்வாய், வளத்துார், மடப்புரம், சேக்காங்குளம், ஆட்டுப்புத்துார், கூத்திரம்பாக்கம், சிறுவள்ளூர், காரை, அக்கமாபுரம், எடையார்பாக்கம், ஏகனாபுரம், குணகரம்பாக்கம், மகாதேவிமங்கலம், சிங்கிலிபாடி, மதுரமங்கலம் ஆகிய கிராமங்களில் நிலம் கையகப்படுத்தப்பட உள்ளன.block_B

Advertisement