வீட்டில் மிளகாய் பொடி துாவி 16 சவரன் நகைகள் திருட்டு

பாபநாசம் : பாபநாசம் அருகே வீட்டிற்குள் புகுந்து நகையை திருடிய மர்ம நபர்கள், வீட்டிற்குள் மிளகாய் பொடி துாவி தப்பினர்.

தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் அருகே ராஜகிரி வடக்கு தெருவைச் சேர்ந்த ஹாஜாமைதீன், 50; சவுதி அரேபியாவில் வேலை பார்க்கிறார். இவரது குடும்பத்தினர், அதே ஊரில் பெரிய தெருவில், வீடு கட்டி வருகின்றனர். இதனால், அங்கு தங்கி பணிகளை கவனிக்கின்றனர்.

இருப்பினும், ஹாஜாமைதீன் மகன் மலீக் இப்ராஹிம், 19, இரவில், பழைய வீட்டிற்கு வந்து செல்வது வழக்கம். அதன் படி, நேற்று முன்தினம் இரவு, மலீக் இப்ராஹிம் வீட்டிற்கு வந்த போது, வீட்டின் உள்ளே யாரோ இருப்பது போல தெரிந்தது. இதையடுத்து, மலீக் இப்ராஹிம் சத்தம் போட்டுள்ளார். அதிர்ச்சியடைந்த மர்மநபர்கள், வீட்டின் அறைகள், மாடிப்படி முழுதும் மிளகாய் பொடியை துாவி தப்பினர்.

இது குறித்த புகாரில், பாபநாசம் போலீசார் வீட்டை சோதனையிட்டதில், பீரோவில் இருந்த, 16 சவரன் நகை திருடு போயிருந்தது. நகைகளை திருடிய மர்ம நபர்களை போலீசார் தேடுகின்றனர்.

Advertisement