அபராதம் செலுத்தாத குவாரியின் சொத்துக்களை ஏலம் விட முடிவு

சிவகங்கை: சிங்கம்புணரி அருகே மல்லாக்கோட்டை, 'மேகா புளூமெட்டல்ஸ்' நிறுவனம், 91 கோடி ரூபாய் அபராதம் செலுத்தாததால், நிறுவனத்தின் சொத்துக்களை ஏலம் விட, தேவகோட்டை சப்- - கலெக்டர் முடிவு செய்துள்ளார்.

சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி அருகே மல்லாக்கோட்டை மேகா புளூ மெட்டல்ஸ் கிரஷர் குவாரியில், மே 20 காலை, பாறைக்கு வெடி வைக்கும் போது, பொக்லைன் டிரைவர் உட்பட ஆறு பேர் உயிரிழந்தனர்.

மேகா புளூமெட்டல்ஸ் உரிமையாளர் மேகவர்மன், மேலாளர், அவரது தம்பி உட்பட சிலர் மீது போலீசார் வழக்கு பதிந்தனர். இந்த நிறுவனத்திற்கு வழங்கப்பட்டிருந்த இரு உரிமங்களும் ரத்து செய்யப்பட்டன.

'ட்ரோன்' மூலம் ஆய்வு செய்து, மேகா புளூமெட்டல்ஸ் உரிமையாளருக்கு, ஜூன் 9ல் தேவகோட்டை சப் - கலெக்டர் ஆயூஸ் வெங்கட் வத்ஸ், 91 கோடி ரூபாய் அபராதம் விதித்தார்.

இந்த அபராத தொகையை 30 நாட்களுக்குள் செலுத்தவும் உத்தரவிடப்பட்டிருந்தது. எனினும், கலெக்டரிடம் மேல்முறையீடு செய்யலாம் என தெரிவித்திருந்தார். நேற்றுடன் அவகாசம் முடிந்து விட்டது. அபராத தொகையை குவாரி நிர்வாகம் செலுத்தவில்லை.

சப்- - கலெக்டர் ஆயூஸ் வெங்கட் வத்ஸ் கூறுகையில், ''இதுவரை அபராதம் செலுத்தவில்லை. தற்போது நீதிமன்றத்தில் வழக்கு இருக்கிறது. அதன்பின் அந்த நிறுவன சொத்துக்களை ஏலம் விட்டு, அபராத தொகை வசூலிப்பது குறித்து முடிவெடுக்கப்படும்,'' என்றார்.

Advertisement