235 கிலோ கஞ்சா பறிமுதல் கோவையில் இருவருக்கு 'கம்பி'

சூலுார் : கோவை அருகே காரில் கடத்தி வந்த, 235 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார், இருவரை கைது செய்தனர்.

கோவை மாவட்டம், சூலுார் பகுதியில் கஞ்சா கடத்தப்படுவதாக, சூலுார் போலீசாருக்கு நேற்று ரகசிய தகவல் கிடைத்தது.

இதையடுத்து, நேற்று மதியம், காங்கயம் பாளையம் பகுதியில், சூலுார் எஸ்.ஐ., லுார்துராஜ், சூலுார் கிராம நிர்வாக அலுவலர் முத்துராஜ் பாண்டியன், ஏட்டு செந்தில் முருகன், நாகார்ஜூன் ஆகியோர், வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது, அவ்வழியே வந்த காரை நிறுத்தி சோதனையிட்டனர்.

அதில், கஞ்சா மூட்டைகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. 70 லட்சம் ரூபாய் மதிப்புள்ள, 235 கிலோ கஞ்சாவையும், காரையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

போலீஸ் விசாரணையில், நாகப்பட்டினம் மாவட்டம், புது கொல்லை வெளியை சேர்ந்த வேதமணி, 29, துாத்துக்குடி மாவட்டம், வேம்பன்காட்டை சேர்ந்த சதீஷ்குமார், 36, என்பதும் தெரிந்தது. இருவரையும் கைது செய்து, போலீசார் விசாரிக்கின்றனர்.

சூலுார் போலீசாரை, எஸ்.பி., கார்த்திகேயன் பாராட்டி, சான்றிதழ் வழங்கினார்.

Advertisement