வல்லக்கோட்டை கோவிலில் நடந்தது வன்கொடுமை அல்ல; பெண் கொடுமை என்கிறார் தமிழிசை

17


சென்னை: ''வல்லக்கோட்டை கோவிலில் நடந்தது வன்கொடுமை அல்ல; பெண் கொடுமை'' என தமிழக பா.ஜ., மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.


அவரது அறிக்கை: வல்லக்கோட்டை முருகன்கோவில் கும்பாபிஷேகத்திற்கு இரண்டு மணி நேரத்திற்கு முன் சென்றேன். மக்களோடு ஒருவராக காத்திருந்தேன். எந்த இருக்கையும் எனக்கு அளிக்கப்படவில்லை; நான் கேட்கவும் இல்லை. காலதாமதமாக சிலர் அவசரமாக வந்தனர். பக்தர்களாக அல்ல, தன்னுடைய பதவிகளை தோளில் சுமந்து வந்தனர்.


உடன் வந்தவர்களும் மேலே ஏற வேண்டும் என்றனர். 'இது அரசியல் மேடை அல்ல' என்று கூறினாலும், எல்லாரும் மேலே ஏறினர். குடமுழுக்கு சிறப்பாக நடந்தது. பெரும் பதவியாளர் வரவில்லை. சிறப்பு வழிக்காக காத்திருந்தார். முருகனும் காத்திருந்தார். பக்தர்களும் காத்திருந்தனர். சிறப்பு கதவு திறக்க சற்று தாமதமானதால் கோபத்துடன் அவர் சென்றுவிட்டார்.



அங்கே பக்தியின் வெளிப்பாடு தான் இருந்தது. அதை, ஜாதியின் வெளிப்பாடு என்று தவறாக பிரகடனப்படுத்தி, 'பத்தோடு பதினொன்றாக நான் நிற்க வேண்டுமா' என, பொதுமக்கள் தரிசனத்தையும், ஆணவத்தோடு ரணப்படுத்தி சென்றார்.


'பெண்கள் எல்லாம் போகும்போது, நான் போகக்கூடாதா' என்று பெருந்தகை கேட்டிருக்கிறார். ஆக, அங்கு நடந்தது வன்கொடுமை அல்ல; பெண் கொடுமை தான். நான் அதை வெளிப்படுத்தவில்லை.


ஏனெனில், நான் அங்கு சென்றது வழிபாட்டுக்கு மட்டுமே. இல்லாத ஒரு பிரச்னையை இருப்பது போல் பெரிதாக்கி, மிக நன்றாக நடந்த குடமுழுக்கை குழப்பி, பக்தர்களுக்கு சங்கடத்தை ஏற்படுத்திவிட்டனர். இவ்வாறு தமிழிசை கூறியுள்ளார்.

வல்லக்கோட்டை முருகன் கோவில் கும்பாபிஷேகத்துக்கு சென்ற தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப் பெருந்தகை, தன்னை கோபுரத்துக்கு செல்ல அதிகாரிகள் அனுமதிக்கவில்லை என்று புகார் கூறியிருந்தார். இது 2000 ஆண்டுகளாக இருக்கும் பிரச்னை என்றும் கூறியிருந்தார்.



அந்த விழாவில், அவருக்கு முன்னதாகவே வந்திருந்த பா.ஜ., தலைவர் தமிழிசை பங்கேற்று இருந்தார். செல்வப் பெருந்தகை புகார் கூறிய நிலையில் தமிழிசை இப்படி அறிக்கை வெளியிட்டுள்ளார்.

Advertisement