பிரசவித்த பெண் அலைக்கழிப்பு; ரூ.60 ஆயிரம் நஷ்டஈடு வழங்க தனியார் மருத்துவமனைக்கு உத்தரவு

திருநெல்வேலி: திருநெல்வேலியில் பிரசவித்த பெண்ணை அலைக்கழித்த விவகாரத்தில் ரூ.60 ஆயிரம் நஷ்டஈடு கொடுக்க தனியார் மருத்துவமனைக்கு கூடுதல் நுகர்வோர் குறைந்திருக்கும் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.


திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டை கிருஷ்ணன் கோவில் மேல தெருவில் வசித்து வந்த செய்யது அலி பாத்திமா என்பவர் கடந்த 2024ம் ஆண்டு மே மாதம் பாளையங்கோட்டையில் உள்ள கிருஷ்ணா மருத்துவமனையில் மகப்பேறுக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு பெண் குழந்தை பிறந்தது. குழந்தைக்கு மஞ்சள் காமாலை நோய் இருந்ததால் போட்டோ தெரபி சிகிச்சைக்காக, குழந்தைகள் தீவிர சிகிச்சை (Neonatal intensive care unit ) பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.


பிறந்த குழந்தைக்கு இரண்டு மணி நேரத்திற்கு ஒவ்வொரு முறையும் தாய்ப்பாலை பெற்று குழந்தைகள் தீவிர சிகிச்சை பிரிவில் உள்ள செவிலியர்கள் குழந்தைக்கு கொடுத்து வந்தனர். மறுநாள் அதிகாலை 4 மணிக்கு தாய்ப்பால் கொண்டு சென்றபோது, தீவிர சிகிச்சை பிரிவில், 'காலிங் பெல்' பலமுறை அடித்தும் செவிலியர்கள் கதவை திறக்கவில்லை குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்க முடியவில்லை. இதனால், தாய்ப்பால் வீணடிக்கப்பட்டதாக மருத்துவமனை நிர்வாகத்திடம் பாத்திமா புகார் தெரிவித்தார்.


குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்க முடியாத நிலை ஏற்பட்டதால் மருத்துவ நிர்வாகத்திற்கும் செய்யது அலி பாத்திமாவுக்கும் இடையே தகராறு ஏற்பட்டதால், மருத்துவமனையில் இருந்து அவரை மருத்துவமனை நிர்வாகம் டிஸ்சார்ச் செய்தது.


குழந்தைக்கு மஞ்சள் காமாலை நோயின் தீவிரம் குறையாத நிலையில், திடீரென டிஸ்சார்ஜ் செய்யப்பட்டதால், அன்றைய தினமே அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் குழந்தையை உள்நோயாளியாக சேர்த்து ஐந்து நாட்கள் தொடர்ந்து சிகிச்சை பெற்று பூரண குணமடைந்து வீடு திரும்பினர்.


இதனிடையே, தனக்கு ஏற்பட்ட மிகுந்த மன உளைச்சல் காரணமாக, செய்யது அலி பாத்திமா வழக்கறிஞர் பிரம்மா என்பவரின் மூலம் திருநெல்வேலி நுகர்வோர் குறைந்திருக்கும் ஆணையத்தில் வழக்கு தொடர்ந்தார். நிர்வாக காரணத்தினால் வழக்கானது கூடுதல் நுகர்வோர் குறைந்திருக்கும் ஆணையத்திற்கு மாற்றப்பட்டது.


இந்த வழக்கினை விசாரித்த ஆணைய தலைவர் பிறவி பெருமாள் மற்றும் உறுப்பினர் சண்முகப்பிரியா ஆகியோர், மருத்துவமனை நிர்வாகம் குழந்தைக்கு உரிய நேரத்தில் தாய்ப்பால் கொடுக்க எந்த உதவியும் செய்யாதது, சேவை குறைபாடு உள்ளிட்ட காரணங்களால் செய்யது அலி பாத்திமாக்கு ஏற்பட்ட மன உளைச்சலுக்கு நஷ்ட ஈடாக ரூ.50 ஆயிரமும், வழக்குச் செலவு ரூ.10 ஆயிரம் என மொத்தம் ரூ. 60,000த்தை 45 தினங்களுக்குள் கிருஷ்ணா மருத்துவமனை நிர்வாகம் கொடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டனர். கொடுக்கத் தவறினால் ஒன்பது சதவீத வட்டியுடன் சேர்த்து கொடுக்க வேண்டும், என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Advertisement