ரேபிஸ் நோய் தடுப்பூசி; கால்நடைத்துறை 'அட்வைஸ்'

பல்லடம்; நாய்களுக்கான ரேபிஸ் நோய் தடுப்பூசியை பயன்படுத்தி, பாதுகாப்புடன் நாய்களை வளர்த்துக் கொள்ளுமாறு, பல்லடம் கால்நடைத்துறை சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பல்லடம் ஒன்றியம், வடுகபாளையம் அரசு கால்நடை மருத்துவமனையில் பணியாற்றி வரும் கால்நடை துறை உதவி இயக்குனர் அன்பரசு கூறியதாவது:

சமீப காலமாக, ரேபிஸ் நோய் தாக்குதல், நாய்களுக்கு மட்டுமன்றி, மனிதர்களுக்கும் அச்சுறுத்தலாக உள்ளது. நோய் பாதிப்பு ஏற்படாமல் இருக்க, நாய்களுக்கு ரேபிஸ் நோய் தடுப்பூசி செலுத்துவது அவசியம்.

புதிதாக பிறந்த நாய்க்குட்டிக்கு, 90 நாட்களுக்குள் ஒரு தடுப்பூசியும், அதன்பின், பூஸ்டர் தடுப்பூசியும் செலுத்த வேண்டும். இதுவரை தடுப்பூசி செலுத்தாமல் இருந்தாலும் இதே நடைமுறை பொருந்தும்.

ரேபிஸ் நோய் தாக்கு தலால், மனிதர்கள் ஏராளமானோர் உயிரிழப்பையும், உடல் ரீதியான பாதிப்புகளையும் சந்திக்கின்றனர். எனவே, தடுப்பூசியே இதற்கு சிறந்த தீர்வு. தனியார் வாயிலாக தடுப்பூசி வாங்கும்போது, தடுப்பூசி ஒன்றுக்கு, 500 ரூபாய்க்கு மேல் செலவாகும். ஆனால், கால்நடைத்துறை சார்பில், 17 ரூபாய் கட்டணத்தில் தடுப்பூசி செலுத்துகிறோம்.

பல்லடம் தாலுகாவில் வசிக்கும் வளர்ப்பு நாய் வைத்திருப்பவர்கள், கட்டாயம், நாய்களுக்கு ரேபிஸ் நோய் தடுப்பூசி போட வேண்டும். மேலும் இது குறித்து தெரிந்து கொள்ள, வடுகபாளையம் அரசு கால்நடை மருத்துவமனையை நாடலாம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement