நமக்குள்ள என்னங்க இருக்கு... வாங்க பேசி தீர்த்துக்கலாம்! நிலுவை வழக்கு விரைந்து முடிக்க.. 3 மாதம் சிறப்பு சமரச தீர்வு முகாம் 

கோவை; நிலுவை வழக்குகளை விரைந்து முடிக்க, சிறப்பு சமரச தீர்வு முகாம், கோவை மாவட்டத்தில் மூன்று மாதம் நடக்கிறது.

நீதிமன்றத்தில் நிலுவையிலுள்ள வழக்குகளை விரைந்து முடிக்க, கோவை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில், சிறப்பு சமரச தீர்வு முகாம், ஜூலை 1 முதல் செப்., 30 வரை நடக்கிறது. கோவை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாக சமரச தீர்வு மையம், பொள்ளாச்சி, மேட்டுப்பாளையம், சூலுார், வால்பாறை ஆகிய தாலுகா நீதிமன்ற வளாகத்திலும், சமரச தீர்வு முகாம் நடைபெறுகிறது. நீதிமன்றத்தில் நிலுவையிலுள்ள வழக்குகளை, நேரடியாகவோ, வக்கீல் வாயிலாகவோ சமரச மையத்திற்கு அனுப்ப கோரலாம்.

இரு தரப்பினர் இடையே, சுமூகமாக சமரச தீர்வு காண, அனைத்து மையங்களிலும், பயிற்சி பெற்ற சமரசர்கள் வழிநடத்துவார்கள். சமரசர் முன்னிலையில், வழக்கு தொடர்ந்தவர், எதிர்தரப்புடன் நேரடியாக பேச்சுவார்த்தை நடத்தலாம்.

தங்கள் தரப்பு வக்கீலுடன் பங்கேற்கலாம். சமரசம் ஏற்படவில்லை என்றால், நீதிமன்றத்தில் மீண்டும் வழக்கு விசாரணையை தொடரலாம். சமரச மையத்தில் சுமூக தீர்வு காணப்படும் பட்சத்தில், ஏற்கனவே செலுத்திய நீதிமன்ற கட்டணத்தை திரும்ப பெறலாம்.

சிறப்பு முகாம் தொடர்பாக, கோவை மாவட்டத்தில் அனைத்து நீதிமன்ற வளாகம் முழுவதும், நோட்டீஸ் ஒட்டப்பட்டுள்ளது. 'வாங்க பேசி தீர்வு காண்போம்; சமரசம் வாயிலாக அமைதி கொள்ளுங்கள்' என்ற வாசகத்துடன், துண்டு பிரசுரம் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

@block_B@

ரகசியம் காக்கப்படும்

சமரச மையத்தில் நடைபெறும், அனைத்து பேச்சுவார்த்தைகளும், எந்த வகையிலும் பதிவு செய்யப்படாது. இரு தரப்பு பேச்சுவார்த்தை ரகசியம் காக்கப்படும். சமரசத்தில் நடத்தப்படும் பேச்சுவார்த்தைகள், ஒருவருக்கு எதிராக சாட்சியங்களாக பயன்படுத்தப்பட மாட்டாது. சமரசத்தால் இரு தரப்புக்கும் வெற்றி என்ற நிலை உருவாகும். சமரச மையத்தில் தீர்வு காணப்பட்ட பிறகு, மேல்முறையீடு கிடையாது.block_B

@block_B@

என்னென்ன வழக்குகள்

நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டு, நீண்டகாலமாக வழக்கு நிலுவையில் இருக்கக்கூடிய, குடும்ப பிரச்னை வழக்கு, வாகன விபத்து இழப்பீடு வழக்கு, குடும்ப வன்முறை, காசோலை மோசடி, வர்த்தக பிரச்னை, பாகப்பிரிவினை மற்றும் சிவில் வழக்குகள், வாடகைதாரர் வழக்கு, நில ஆர்ஜித வழக்கு, தொழிலாளர் வழக்கு போன்ற வழக்குகள், சமரச தீர்வு விசாரணைக்கு எடுத்து கொள்ளப்படுகின்றன.block_B

Advertisement