மேய்ச்சல் நிலங்களை மீட்டெடுங்கள்; நாம் தமிழர் கட்சி வலியுறுத்தல்

சென்னை : 'தமிழகம் முழுதும் உள்ள, மேய்ச்சல் தரிசு, மந்தை புறம்போக்கு நிலங்களை, மீட்டெடுக்க வேண்டும்' என, நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தி உள்ளார்.


நா.த.க.,வின் உழவர் பாசறை சார்பில், ஆடு, மாடுகளின் மாநாடு, மதுரையில் நடந்தது.

மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:



'வன உரிமை அங்கீகார சட்டம் 2006', மேய்ச்சல் சமூக மக்களுக்காக வழங்கியுள்ள, வன மேய்ச்சல் உரிமையை வழங்க வேண்டும்

தமிழகம் முழுதும் உள்ள, மேய்ச்சல் தரிசு, மந்தை புறம்போக்கு நிலங்களை, மீட்டெடுக்க வேண்டும்

கிடை ஆடு, மாடுகளின், பாரம்பரிய வலசைப் பாதை களை ஆவணப்படுத்தி அங்கீகரிக்க வேண்டும்

மாநிலம் முழுதும், மேய்ச்சல் முறையில் வளர்க்கப்படும், கிடை ஆடு, கிடை மாடு, எருமை, வாத்து மேய்ப்போருக்காக, 'தமிழ்நாடு மேய்ச்சல் பொருளாதார மேம்பாட்டு வாரியம்' அமைக்க வேண்டும்

நாட்டின ஆடு, மாடுகளை பாதுகாக்க, அதை வளர்க்கும் மக்களுக்கு தனியாக, சிறப்பு திட்டங்களை ஏற்படுத்த வேண்டும்

கால்நடைகளுடன் இடம் விட்டு இடம் பெயரும் மக்களின் உரிமைக்கும், உடமை பாதுகாப்பிற்கும், வலசை செல்வோர் பாதுகாப்பு சட்டம் இயற்ற வேண்டும்

இயற்கை பேரிடர்களில் பாதிக்கப்படும், மேய்ச்சல் சமூக மக்கள் மற்றும் கால்நடைகளுக்கு, தனியாக காப்பீட்டு திட்டங்களை ஏற்படுத்த வேண்டும்

'சிப்காட்' போன்ற திட்டங்களுக்கு, மேய்ச்சல் நிலங்கள் கையகப்படுத்தப்படுவதை தடை செய்ய வேண்டும்

தமிழக வனத்தோட்ட கழகத்திற்கு, குத்தகைக்கு விடப்பட்டு, இயற்கையான மேய்ச்சல் காடுகள் அழிக்கப்பட்டு, 1.85 லட்சம் ஏக்கருக்கு அதிகமான வன நிலங்களில், தைல மரம் உள்ளிட்ட வணிக மரங்கள் நடப்பட்டுள்ளன. அதை மாற்றி, மீண்டும் இயற்கையான காடுகளை உருவாக்க வேண்டும்

கிடாய் முட்டு, சேவல் சண்டை, மஞ்சு விரட்டு போன்ற கால்நடை சார்ந்த, பாரம்பரிய விளையாட்டுகளை தடையின்றி நடத்த அனுமதிக்க வேண்டும்

கால்நடை துறை மருந்தகங்களில், தமிழ் கால்நடை மருத்துவம், மருந்துகளை பயன்படுத்த வேண்டும்.

தமிழகத்தில் அழிந்து வரும், எருமை வளர்ப்பை மீட்டெடுக்க, எருமை பாலுக்கு சிறப்பு கொள்முதல் விலை நிர்ணயம் செய்ய வேண்டும்

மேய்ச்சல் வலகை வழித்தடங்களில் உள்ள நெடுஞ்சாலை, ரயில் தண்டவாளப் பாதைகளில் மேய்ச்சலுக்காக சுரங்க பாதைகள் உருவாக்க வேண்டும்

மேய்ச்சல் சமூக மக்களுக்கு, தனியாக அடையாள அட்டை வழங்கி, இலவச காப்பீடு திட்டத்தை உருவாக்க வேண்டும்

கால்நடைத் துறையில், மேய்ச்சல் கால்நடைகளுக்கு என, தனிப்பிரிவு உருவாக்க வேண்டும்.

இவ்வாறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Advertisement