சிறுமியருக்கு பாலியல் துன்புறுத்தல்: மத போதகர் உட்பட மூவர் கைது

9


சென்னை: வண்டலுார் அடுத்த ஊனமாஞ்சேரியில், தனியார் ஆதரவற்றோர் இல்லத்தில், சிறுமியருக்கு பாலியல் தொல்லை கொடுத்த மதபோதகர் உட்பட மூவர் கைது செய்யப்பட்டனர்.


விழுப்புரம் மாவட்டம், திண்டிவனத்தைச் சேர்ந்தவர் அருள்தாஸ், 75; மத போதகர். இவர், 2011ம் ஆண்டு, செங்கல்பட்டு மாவட்டம், வண்டலுார் அடுத்த ஊனமாஞ்சேரி பெரியார் தெருவில், 'தம்பி இல்லம்' என்ற பெயரில், ஆதரவற்றோர் இல்லம் நடத்தி வருகிறார். பிரியா, 40, என்பவர் மேலாளராக பணியாற்றி வருகிறார்.


தற்போது இல்லத்தில், 18 வயதுக்குட்பட்ட 16 சிறுவர்கள், 18 சிறுமியர் உள்ளனர். இவர்களில், எட்டு சிறுமியர், அருகில் உள்ள அரசு பள்ளியில், 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 1 பிளஸ் 2 படிக்கின்றனர். சிறுமியரை காரில் பள்ளிக்கு அழைத்து சென்றுவர, ஊனமாஞ்சேரியைச் சேர்ந்த பழனி, 52, என்பவர், ஓராண்டுக்கு முன் ஓட்டுநராக நியமிக்கப்பட்டார்.


இந்நிலையில், ஓட்டுநர் பழனி, அருள்தாஸ் இருவரும், தொடர்ந்து எட்டு சிறுமியரிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டு வந்துள்ளனர். இதுகுறித்து, செங்கல்பட்டு மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் சரவணகுமாருக்கு தகவல் கிடைத்தது. கடந்த 10ம் தேதி இரவு 7:30 மணியளவில், குழந்தைகள் நல பாதுகாப்பு அலுவலக அதிகாரிகள் குழுவினர், ஆதரவற்றோர் இல்லம் சென்று, அங்குள்ள சிறுமியரிடம் விசாரணை நடத்தினர்.


விசாரணையில், அருள்தாஸ், ஓட்டுநர் பழனி இருவரும், சிறுமியரிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டது உறுதியானது. இதற்கு, மேலாளர் பிரியா உடந்தையாக இருந்தது தெரிந்தது.
இதையடுத்து, இல்லத்தில் தங்கியிருந்த சிறுவர் - சிறுமியர், அரசு காப்பகத்திற்கு மாற்றப் பட்டனர். இதுகுறித்து, வண்டலுார் மகளிர் காவல் நிலையத்தில், குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் புகார் அளித்தார்.


வழக்கு பதிவு செய்த போலீசார், அருள்தாஸ், பழனி, பிரியா மூவரையும் நேற்று கைது செய்தனர். அப்போது, அருள்தாஸ் நெஞ்சுவலிப்பதாக கூறினார். இதையடுத்து, குரோம்பேட்டை அரசு மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டார்.


தொடர்ந்து, சென்னை ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். பிரியா, பழனி இருவரும், செங்கல்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, நேற்றிரவு செங்கல்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

Advertisement