தந்தையின் கட்சிப் பதவிக்கு வேட்டு வைத்த தனயன்: ராஜ்யசபா எம்.பி., கல்யாணசுந்தரம் அப்செட்

7

தஞ்சை: தி.மு.க., ராஜ்ய சபா எம்.பி., கல்யாணசுந்தரத்திடம் இருந்து தஞ்சை வடக்கு மாவட்ட செயலாளர் பதவியை பறிக்க, அவரது மகனின் தவறான செயல்பாடுகளே காரணம் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன.



தஞ்சை மாவட்டம் தி.மு.க., வடக்கு மாவட்ட செயலாளராக ராஜ்யசபா எம்.பி., கல்யாணசுந்தரம் பதவி வகித்தார். கருணாநிதியிடம் மிகுந்த செல்வாக்குடன் இருந்தவர்.


அந்த மரியாதைக்காக அவருக்கு ராஜ்யசபா எம்.பி., பதவி தரப்பட்டது. ஆனால் அவர் மீது ஆளுங்கட்சியினர், அடுக்கடுக்கான புகார்களை கட்சி தலைமைக்கு அனுப்பி கொண்டே இருந்தனர்.


இதை நீண்ட நாட்களாக பொறுத்துக் கொண்டிருந்த கட்சி தலைமை, இன்று மாவட்ட செயலாளர் பதவியை பறித்தது. கும்பகோணம் எம்.எல்.ஏ.,வாக உள்ள சாக்கோட்டை அன்பழகன் மாவட்ட பொறுப்பாளராக நியமிக்கப்பட்டார். இதற்கான பின்னணி காரணங்களை கட்சியினர் அடுக்கினர்.


இதில், முக்கியமான காரணம், கட்சிக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் வகையில் கல்யாணசுந்தரத்தின் மகன் செய்த சில தவறான செயல்கள் என்று கட்சியினர் கூறுகின்றனர்.


கும்பகோணம் பரஸ்பர ஸகாய நிதி நிறுவனத்தின் தலைவராக உள்ள கல்யாணசுந்தரம், அவரது காரை நிறுத்த, பாசன வாய்க்காலை ஆக்கிரமித்து சிமெண்ட் தளம் அமைத்தார்.


நீதிமன்ற உத்தரவுப்படி அதை அகற்ற சென்ற அதிகாரிகளை கல்யாணசுந்தரம், அவரது மகன் முத்துசெல்வன் இருவரும் மிரட்டி அனுப்பினர். அந்த நடவடிக்கைக்கு காரணமான மாநகராட்சி கமிஷனர் மாற்றப்பட்டார். இதன் பின்னணியில் கல்யாணசுந்தரம் இருப்பதாக சர்ச்சை எழுந்தது.


காங். எம்.பி., அதிருப்தி


அரசு நிகழ்ச்சி ஒன்றில், மயிலாடுதுறை தொகுதி காங்கிரஸ் எம்.பி சுதாவை வைத்து கொண்டு காங்கிரஸ் கட்சியில் இங்கு ஆளே இல்லை. தலைமை சொன்னதால் உங்களை ஜெயிக்க வைத்தோம் என கல்யாணசுந்தரம் பேசினார். இதனால் எம்.பி., சுதா அதிருப்தியடைந்து, விவகாரம் பற்றி தி.மு.க., தலைமையிடம் புகார் தெரிவித்தார்.


10 மாத குழந்தை


அரசு விழா ஒன்றில் கல்யாணசுந்தரம், 'எல்லாம் உடனே கிடைத்து விடாது. திருமணம் ஆனால் கூட பத்து மாதத்திற்கு பிறகு தான் குழந்தை பிறக்கும். திருமணத்திற்கு முன்பே, திருமணம் நடக்கின்ற அன்றே குழந்தை பிறக்க வேண்டும் என்றால், அது வேறு விதமாக தான் பிறக்கும். முன்கூட்டியே காதல் செய்து, கர்ப்பமானால் திருமணம் ஆன அன்றே குழந்தை பிறக்கும்' என பேசிய விவகாரம் சர்ச்சையை உருவாக்கியது.


அறிவாலயம் நிதியில் முறைகேடு?


கும்பகோணத்தில் மாவட்ட கட்சி அலுவலகம் கலைஞர் அறிவாலயம் என்ற பெயரில் கட்டும் பணி துவங்கப்பட்டது. ஒன்றரை ஆண்டுகளாக பணிகள் நடந்து வருகிறது. அதற்காக கட்சி வழங்கிய நிதியை முறையாக செலவு செய்யவில்லை எனவும் புகார் எழுந்தது.


புதிய பஸ் ஸ்டாண்ட் அமைக்க வேண்டும் என்ற அறிவிப்பு வந்த உடன், தனது ஊருக்கு அருகே இதை கொண்டு செல்ல வேண்டும். தான் அதில் ஆதாயம் பெற வேண்டும் என காய் நகர்த்தியதால் பிரச்சனை ஏற்பட்டது.


தண்ணீர் வடிவில் பிரச்சனை;


எம்.பி., கல்யாணசுந்தரம் மகன் முத்துசெல்வன் வாட்டர் கேன் நிறுவனம் நடத்தி வருகிறார். அதில் போலி ஐ.எஸ்.ஐ., முத்திரை கொண்ட வாட்டர் கேன்களை மதுரை தர நிர்ணய அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இந்த விவகாரம் தொடர்பாக சமீபத்தில் அ.தி.மு.க., பிரச்சனை கிளம்பியது. இது கட்சி தலைமையிடம் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.


மகனால் பறிபோனது;


கல்யாண சுந்தரம் மகன் முத்துசெல்வன், வடக்கு மாவட்டத்தில் உள்ள 54 டாஸ்மாக் பார் மூலம் தினமும் வசூல் பார்ப்பதாகவும், அ.தி.மு.க., மாஜி ஒருவரின் மகனுடன் தொடர்பு வைத்துக் கொண்டு செயல்படுவதாகவும் உள்ளூர் கட்சியினர் தலைமைக்கு புகார் அனுப்பி வைத்தனர்.


கட்சியினர் புகார்:


இவை மட்டுமின்றி, கல்யாண சுந்தரம் கட்சியில் உள்ள ஒன்றிய, நகர பொறுப்பாளர்களை மதிப்பதில்லை என்றும் புகார்கள் உள்ளன.


மேலும், கல்யாணசுந்தரம் மகன் முத்துசெல்வன் அரசு பணிகளை ஒப்பந்தம் எடுக்க விடாமல் தடுப்பது, கோடிக்கு மேல் பத்திரம் பதிவு நடந்தால், அவரை சந்திக்க வேண்டும் என கூறி வருவது, கட்சி பணத்தை எடுத்து தனது சொந்த செலவிற்கு பயன்படுத்துவது என பல்வேறு புகார்களை கட்சியினர் சமீபத்தில் நடந்த உடன்பிறப்பே நிகழ்ச்சியில் ஒன்றிய மற்றும் நகர செயலாளர்கள் முதல்வர் ஸ்டாலினிடம் நேரடியாக புகார்களை அளித்தனர்.


இதையடுத்து சமீபத்தில் திருவாரூருக்கு வந்த முதல்வர் ஸ்டாலின், சாக்கோட்டை அன்பழகனை மாவட்ட பொறுப்பாளராக நியமிக்க திட்டமிட்டு அறிவித்துள்ளார் என்று மாற்றத்திற்கான பின்னணி காரணங்களை கட்சியினர் அடுக்கினர்.

Advertisement