கூட்டணிக்கு வரலாம்: உத்தவ் தாக்கரேவை அழைத்த பட்னவிஸ்

1

மும்பை: '' உத்தவ் தாக்கரே விரும்பினால் பா.ஜ., உடன் கூட்டணிக்கு வரலாம்,'' என மஹாராஷ்டிரா முதல்வர் பட்னவிஸ் கூறியுள்ளார்.


மஹாராஷ்டிராவில், பா.ஜ., ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா, அஜித் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் ஆகிய கட்சிகள் அடங்கிய கூட்டணி ஆட்சி நடக்கிறது. முதல்வராக பா.ஜ.,வைச் சேர்ந்த பட்னவிஸ் உள்ளார். உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா, சரத்பவாரின் தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் ஆகிய கட்சிகள் எதிர்வரிசையில் உள்ளன. கடந்த சில மாதங்களுக்கு முன்பு பா.ஜ., உடன் உத்தவ் தாக்கரே கூட்டணி அமைக்கலாம் என யூகங்கள் கிளம்பின. ஆனால், அதனை அக்கட்சி திட்டவட்டமாக மறுத்துவிட்டது. மாநில அரசுக்கு எதிராக உத்தவ் தாக்கரே கட்சியினர் கடுமையான விமர்சனங்களையும் போராட்டங்களையும் நடத்தி வருகின்றனர்.


இந்நிலையில், சட்டசபையில் முதல்வர் பட்னவிஸ் பேசியதாவது: வரும் 2029ம் ஆண்டு வரை நாங்கள் எதிர்க்கட்சி வரிசை செல்வதற்கு வாய்ப்பு இல்லை. ஆனால், நீங்கள் கூட்டணி மாற விரும்பினால் பரிசீலனை செய்யுங்கள். முடிவு உங்கள் கையில் தான் உள்ளது. கூட்டணி குறித்து பரிசீலனை செய்யலாம். இவ்வாறு அவர் கூறினார்.


பொது வெளியில் உத்தவ் தாக்கரேவை வரவேற்று பட்னவிஸ் பேசுவது இதுவே முதல் முறையாகும். இந்தப் பேச்சு பல வித யூகங்களை கிளப்பியுள்ளது. பழைய கூட்டணி கட்சிகள் மீண்டும் ஒன்று சேருமா என எதிர்பார்ப்பு ஏற்பட்டது.


ஆனால் உத்தவ் தாக்கரே கட்சியினர், '' பட்னவிஸ் பேச்சை நகைச்சுவையாக தான் பேசி உள்ளார். அதனை அப்படியே எடுத்துக் கொள்ள வேண்டும்' எனத் தெரிவித்துள்ளனர்.

Advertisement