மனிதர்களுடன் உணவை பகிரும் உயிரினம்

உலகின் மிகப்பெரிய திமிங்கிலங்களுள் ஒன்று ஓர்க்கா திமிங்கிலம். இவை உலகம் முழுவதும் வாழ்கின்றன. நார்வே, அன்டார்டிகா, அலாஸ்கா ஆகிய குளிர்ப் பிரதேசங்களை ஒட்டிய கடல்களில் அதிகமாக இருக்கும்.

இவை மிகவும் புத்திசாலிகள். கூட்டமாக வேட்டையாடித் தங்களுக்குள் உணவைப் பகிர்ந்து உண்ணும். இவை மனிதர்களுடன் உணவைப் பகிர்ந்துகொள்வது 34 வீடியோக்களில் பதிவாகி உள்ளது.

மிக அதிகமாக ஆராய்ச்சி செய்யப்பட்ட கடல் வாழ் உயிரினங்களில் ஓர்க்காவும் ஒன்று. ஆய்வுக்குச் செல்லும் மனிதர்களிடம் பழகுவதற்காக இவை தாங்கள் வேட்டையாடிய உணவை அவர்களுக்குத் தருகின்றன. மனிதர்கள் அதை ஏற்கிறார்களா, மறுக்கிறார்களா என்று கவனிக்கின்றன. மனிதர்களின் எதிர்வினையை இவை மிக நன்றாகப் புரிந்து கொள்கின்றன.

சில நேரங்களில் படகுகளில் செல்பவர்கள், கரையில் இருப்பவர்களிடம் கூட, இவை உணவைப் பகிர முற்படுகின்றன. உலகில் வாழும் உயிரினங்களில் இவை இரண்டாவது பெரிய மூளையை உடையவை. மனிதர்களிடமிருந்து நாகரிகத்தையும், புது விஷயங்களையும் கற்பதற்காகவே இவை இவ்வாறு பழக முற்படுகின்றன என்று ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்.

Advertisement