கலெக்டர் அனுமதியின்றி குடியிருப்பு பகுதிகளில் நாம சங்கீர்த்தனம் நிகழ்ச்சி நடத்தக் கூடாது: ஐகோர்ட் உத்தரவு

11

சென்னை: 'மாவட்ட கலெக்டர் அனுமதியின்றி, குடியிருப்பு பகுதியில், எந்த மதத்தினரும் கூட்டு பிரார்த்தனை கூட்டங்கள் நடத்தக் கூடாது' என, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

செங்கல்பட்டு மாவட்டம், குரோம்பேட்டை, ராதா நகர், கிருஷ்ணமாச்சாரி தெருவில் வசிக்கும் சுப்பிரமணியன் என்பவரது வீட்டில், 'காட்' எனும் தெய்வீகத்திற்கான சர்வதேச அமைப்பு என்ற அமைப்பின் சார்பில் நாம சங்கீர்த்தனம் நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. இது அப்பகுதியில் குடியிருப்போருக்கு, இடையூறாக உள்ளது எனக் கூறி, அப்பகுதியை சேர்ந்த பிரகாஷ் ராமச்சந்திரன், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த மனுவை விசாரித்த, நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் பிறப்பித்த உத்தரவு:



கன்னியாகுமரி மாவட்டத்தில் குடியிருப்பு பகுதியில் கிறிஸ்தவ பிரார்த்தனை கூட்டங்கள் நடத்துவதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், மாவட்ட கலெக்டர் அனுமதியின்றி, இதுபோல் கூட்டங்கள் நடத்தக்கூடாது என, இந்த நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


அந்த உத்தரவு, இந்த வழக்கிற்கும் பொருந்தும். சட்டம் அனைவருக்கும் சமம். மாவட்ட கலெக்டரின் அனுமதியின்றி, குடியிருப்பு பகுதிகளில் எந்த மதத்தினரும் பிரார்த்தனை கூட்டங்கள் நடத்தக் கூடாது. மாவட்ட கலெக்டரின் அனுமதியின்றி, குடியிருப்பு பகுதியில், நாம சங்கீர்த்தனம் நடத்தக் கூடாது.



சிலரின் காதுகளுக்கு தெய்வீகமாக விளங்கும் இசை, மற்றவர்களுக்கு இடையூறாக இருக்கும். அமைதியான முறையில் பிரார்த்தனை செய்வது தான் சிறந்த பிரார்த்தனை. இந்த உண்மையை மக்கள் உணர வேண்டும். சப்தமாக கடவுளை பிரார்த்தித்து, மற்றவர்களுக்கு இடையூறு ஏற்படுத்தக் கூடாது.


பிரார்த்தனைகள், வீட்டின் நான்கு சுவர்களுக்குள் மட்டும் இருக்க வேண்டும். மற்றவர்களுக்கு இடையூறாக இருக்கக் கூடாது. இந்த உத்தரவு அமல்படுத்தப்படுவதை, சிட்லப்பாக்கம் போலீசார் உறுதி செய்ய வேண்டும். இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

Advertisement