அறிக்கை தாக்கல் செய்யாத ஐகோர்ட்டுகளுக்கு கெடு

புதுடில்லி: நாடு முழுதும் நீதிமன்றங்கள், விசாரணை ஆணையங்களில் உள்ள கழிப்பறை வசதி பற்றிய நிலை அறிக்கையை எட்டு வாரங்களுக்குள் தாக்கல் செய்யும்படி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

வழக்கறிஞர் ராஜிப் கலிதா என்பவர் தாக்கல் செய்த மனுவில், கடந்த ஜன.,15ல் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஜே.பி.பர்திவாலா, ஆர்.மஹாதேவன் ஆகியோர் அடங்கிய அமர்வு பிறப்பித்த உத்தரவில், அரசியலமைப்பு சட்டப்படி அடிப்படை உரிமை என்பது பொது சுகாதாரம் அடங்கும் எனக் குறிப்பிட்டு, நாடு முழுதும் உள்ள நீதிமன்றங்களில் போதுமான கழிப்பறைகள் இருப்பதை உறுதி செய்யும்படியும், அது குறித்த நிலை அறிக்கையை நான்கு மாதங்களில் தாக்கல் செய்யும்படியும் அனைத்து உயர் நீதிமன்றங்களுக்கு உத்தரவிட்டது.

இந்த வழக்கின் விசாரணை நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. உச்ச நீதிமன்ற உத்தரவின்படி, நாட்டில் உள்ள 25 உயர் நீதிமன்றங்களில் ஜார்க்கண்ட், மத்திய பிரதேசம், கொல்கட்டா, டில்லி, பாட்னா உயர் நீதிமன்றங்கள் மட்டுமே நிலை அறிக்கையை தாக்கல் செய்துள்ளன.

இதை சுட்டிக்காட்டிய நீதிபதிகள் ஜே.பி.பர்திவாலா, ஆர்.மஹாதேவன், நிலை அறிக்கை தாக்கல் செய்யாத உயர் நீதிமன்றங்கள், கடைசி வாய்ப்பாக, எட்டு வாரங்களுக்குள் தாக்கல் செய்ய வேண்டும். இல்லை எனில், கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என எச்சரிக்கை விடுத்து, வழக்கை ஒத்தி வைத்தனர்.

Advertisement