மதுரையில் மாநில மாநாடு கிருஷ்ணசாமி தகவல்

மதுரை: 'கள் உண்ணாமையை வலியுறுத்தி தமிழகம் முழுவதும்100 கருத்தரங்கு நடத்தப்படும். மதுரையில் புதிய தமிழகம் கட்சியின் 7 வது மாநில மாநாடு நடத்தப்படும்,' என அக்கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி தெரிவித்தார்.

அவர் மதுரையில் கூறியதாவது:

திருநெல்வேலி மாவட்டம் மாஞ்சோலை மலைப் பகுதியில் வசிக்கும் 1000க்கும் மேற்பட்ட தேயிலை தோட்ட தொழிலாளர்களின்வாழ்வாதாரம் கேள்விக்குறியாக உள்ளது. அவர்களின் அடிப்படை தேவைகளான குடிநீர், மின்சாரம், போக்குவரத்து உள்ளிட்டவை நிறுத்தப்பட்டு, கட்டாயப்படுத்தி வெளியேற்ற முயற்சிக்கின்றனர். மாஞ்சோலை தோட்ட தொழிலாளர்கள் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தொடர்ந்த வழக்கு ஜூலை 21ல் விசாரணைக்கு வரவுள்ளது. இதனால் 2 நாட்களாக அங்குள்ள மக்களுக்கு அடிப்படை வசதிகள் ஏதும் வழங்கப்படவில்லை. மாநிலஅரசு தன் சொந்த மக்களை வதைக்கிறது. கலெக்டர் உடனே அதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

குடிப்பழக்கத்தால் மக்களின் சிந்திக்கும் திறன் பாதிக்கப்படுகிறது. ஆனால், சிலர் அரசியல் காரணங்களுக்காக கள் நல்ல பானம் என பிரசாரம் செய்கின்றனர். திருக்குறள், சிலப்பதிகாரத்தில் கள்ளுண்ணாமை வலியுறுத்தப்பட்டுள்ளது. அதை முறையாக உற்பத்தி செய்யாத போது ஆல்கஹால் அதிகம் இருக்கும். கள், மதுவிற்கு எதிராக தமிழகம் முழுவதும் வரும் டிசம்பர் வரை 100 கருத்தரங்குகள் நடத்தப்படும். முதல்கட்டமாக திருச்சியில் ஜூலை 27ல், தேனியில் ஆக.,2ல் நடக்கும் கருத்தரங்கில் 1000 பெண்கள் கலந்து கொள்வர். தொடர்ந்து மாவட்ட, ஒன்றிய அளவில் நடக்கும்.

மதுரையில் மாநாடு



புதிய தமிழகம் கட்சியின் 7 வது மாநில மாநாடு மதுரையில் நடத்தப்படும். விரைவில் தேதி அறிவிக்கப்படும். தேவேந்திரகுலவேளாளர் மக்களை சுரண்டும் வகையில் சிலர் செயல்படுகின்றனர். வரும் சட்டசபை தேர்தல் மிக முக்கியமானது. ஆட்சி அதிகாரத்தில் பங்கு பெற, கணிசமான வெற்றியை பதிவு செய்ய வேண்டும் என்ற இலக்கில் பயணிக்கிறோம்.

இவ்வாறு கூறினார்.

Advertisement