675 வேளாண்மை அலுவலர்கள் பதவி உயர்வுக்கு காத்திருப்பு

கம்பம்:2009 முதல் 2012 வரை வேளாண்மை அலுவலர்களாக பணி நியமனம் செய்யப்பட்ட 675 பேர் பதவி உயர்விற்காக காத்திருக்கின்றனர்.

வேளாண்மை துறையில் உதவி வேளாண் அலுவலர், வேளாண் அலுவலர், உதவி இயக்குனர், துணை இயக்குனர், இணை இயக்குனர், கூடுதல் இயக்குனர், இயக்குனர் என பதவி உயர்வு வழங்கப்படுகிறது.

வேளாண் அலுவலர்கள் வேளாண் பட்டப்படிப்பு முடித்து பணியில் சேருகின்றனர். 2009 ல் வேளாண் அலுவலர்களாக பணியில் சேர்ந்த 500 பேரில் 250 பேருக்கு 5 ஆண்டுகளுக்கு முன் உதவி இயக்குனர் பதவி உயர்வு வழங்கப்பட்டது. இந்த பேட்ஜில் 250 பேருக்கு பதவி உயர்வு வழங்கப்படவில்லை. 2012 ல் வேளாண் அலுவலர்களாக பணியில் சேர்ந்த 425 பேருக்கு 13 ஆண்டுகளாக பதவி உயர்வு வழங்கப்படவில்லை.

வேளாண் அலுவலர் சங்கம் தொடர்ந்து வலியுறுத்தியதால் தற்போது 2009 பேட்ஜில் 250 பேரின் பதவி உயர்வு பேனல் அரசு அனுமதிக்கு சென்றுள்ளது.

இதுகுறித்து வேளாண் துறை அதிகாரிகள் கூறியதாவது:

வேளாண்மை துறையில் குறிப்பிட்ட காலக்கெடுவில் பதவி உயர்வு வழங்க சட்டத்தில் வலியுறுத்தவில்லை. பத்தாண்டுகள் பணிபுரிந்தால் ஒரு சம்பள உயர்வு (இன்கிரிமென்ட்) வழங்க வேண்டும். பதவி உயர்விற்குரிய பணப்பலன் வழங்கப்படுகிறது.

ஆனால் பதவி உயர்வு கிடைப்பது இல்லை. காலியிடங்கள் ஏற்படும் போது பதவி உயர்வு வழங்கப்படுகிறது. 2009, 2012 ம் ஆண்டுகளில் நியமனம் செய்த 675 பேர் பதவி உயர்வு இன்றி மன உளைச்சலில் உள்ளனர். இவர்களுக்கு அரசு விரைந்து பதவி உயர்வு வழங்க வேண்டும் என்றார்.

Advertisement