முள்ளம் பன்றி தோற்றம் கொண்ட பேத்தை மீன்; மன்னார் வளைகுடா அதிசயம்

1


சாயல்குடி: மன்னார் வளைகுடா கடலில் முள்ளம் பன்றியின் தோற்றத்தை கொண்ட பேத்தை மீன்கள் அதிகமாக காணப்படுகின்றன.


இது ஒரு வினோதமான கடல் மீனாகும். இவை பேத்தை மீன் அல்லது முள்ளம்பன்றி மீன் என அழைக்கப்படுகிறது. தன்னை ஆபத்தில் இருந்து காத்துக்கொள்ள தண்ணீர் அல்லது காற்றை விழுங்கி தன் உடலை பத்து மடங்கு பெரிதாக்கிக் கொள்ளும். இந்த மீன் உடலில் கூரிய முட்களை கொண்டிருக்கும். முட்கள் சாதாரண நிலையில் படுக்கை நிலையில் இருக்கும்.

ஆனால் பெரிதாக்கிக் கொள்ளும் போது அந்த முட்கள் நிமிர்ந்து நிற்கும். இது பார்ப்பதற்கு முள்ளம்பன்றி போல தோற்றமளிக்கும். பேத்தை மீன் நச்சுத்தன்மை கொண்டது. பெரும்பாலான மீன்கள் இதனை உண்பதில்லை. மீறி உண்டால் அதை விழுங்கிய மீனின் தொண்டையில் சிக்கி அந்த மீனை உயிரிழக்கச் செய்யும் அபாயம் கொண்டது. இவ்வகைமெதுவாக நீந்தும் தன்மை கொண்டது.



சாயல்குடி அருகேயுள்ள வாலிநோக்கம், நரிப்பையூர், மாரியூர் மற்றும் கீழக்கரை உள்ளிட்ட மன்னார் வளைகுடா கடல் பகுதிகளில் ஆழம் குறைந்த பகுதிகளில் காணப்படுகின்றன. 'டையோடோன்டிடே' எனும் விலங்கியல் பெயர் கொண்ட குடும்பத்தைச் சேர்ந்ததாகும். வலைகளில் சிக்கும் இவ்வகை மீன்களை மீனவர்கள் கடலில் விட்டு விடுகின்றனர்.சில சமயங்களில் காற்றை நிரப்பி கொண்டு ரப்பர் பந்து போல கடலில் மிதக்கும்.


ஏதாவது பறவை இதை பிடித்தாலும் இது ஊதிப் பெருகுவதால் இதனை விழுங்க முடியாமல் விட்டு விடும். சிறிய ஒட்டு மீன்கள் கடல் புழுக்கள் இவற்றின் உணவாகும். நண்டு, இறால்கள் போன்ற சிறிய ரக மீன்களை விரும்பி சாப்பிடுகின்றன. பேத்தை மீன்களின் பற்கள் மிகவும் உறுதியானவை. கடினமான ஓடுகளை உடைக்க இதன் பற்கள் உதவுகிறது. பல்வேறு தந்திரங்களை கற்றுள்ள பேத்தை மீன் ஆச்சரியங்களின் அணிவகுப்புகளில் ஒன்றாக திகழ்கிறது.

Advertisement