பிரபாகரன் கொடுத்த சயனைடு குப்பி இன்றும் வைத்திருக்கிறேன்: வைகோ

தர்மபுரி:''தி.மு.க.,விடம் ஆறு எம்.எல்.ஏ., சீட்டுக்காக நான் காத்து கிடக்கவில்லை; கொள்கைக்காக தான் தி.மு.க.,வை ஆதரிக்கிறேன்,'' என, தர்மபுரியில் நடந்த ம.தி.மு.க., செயல்வீரர்கள் கூட்டத்தில், அக்கட்சியின் பொதுச்செயலர் வைகோ பேசினார்.

கூட்டத்தில் வைகோ பேசியதாவது:

நான் மாநில கல்லுாரியில் படித்தபோது, மாணவர்கள் கூட்டத்தில் பேசியதை பார்த்து, முன்னாள் முதல்வர் காமராஜர் என்னை காங்கிரசில் சேர அழைத்தார். ஆனால், நான் தி.மு.க.,வில் இணைந்து விட்டதாக கூறி மறுத்து விட்டேன். தி.மு.க.,வில் 1966 முதல், 1993 அக்டோபர் வரை பயணித்தேன். மிசா சட்டத்தில் கைதாகி, கடைசியாக விடுதலையானது நான் தான். தி.மு.க.,விலிருந்து நீக்கப்பட்ட பின், ம.தி.மு.க.,வை துவங்கினேன். அப்போதும் நான், தி.மு.க.,வை எதிர்க்கவில்லை. ஜெயலலிதாவை எதிர்த்து அரசியல் செய்வதாக அறிவித்தேன்.

முன்னாள் பிரதமர் வாஜ்பாயை நான் நேசித்ததாலும், ம.தி.மு.க.,வில் இருந்து வெளியேறிய முன்னாள் நிர்வாகிகள் வற்புறுத்தியதாலும், அ.தி.மு.க.,வுடன் கூட்டணி வைக்க வேண்டியதானது. அதை தவறு என பலரும், கடந்த ஒரு வாரமாக விமர்சிக்கின்றனர். அ.தி.மு.க.,வுடன் கூட்டணி என்ற முடிவு தவறாக முடிந்து விட்டது.

இஸ்லாமியர்கள், கிறிஸ்துவர்களை இந்தியாவில் இருந்து வெளியேற்ற, பா.ஜ.,வினர் தீர்மானம் போட்டனர். அதை எதிர்த்து, பா.ஜ., கூட்டணியை முறித்து கொண்டேன். இலங்கையில் விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரனை சந்தித்தபோது, அவர் வைத்திருந்த இரண்டு சயனைடு குப்பிகளில் ஒன்றை எனக்கு அணிவித்தார். அதை நான் இன்னமும் பத்திரமாக வைத்துள்ளேன்.

ஹிந்துத்துவா சக்திகளை தமிழகத்தில் நுழைய விடக்கூடாது என்பதற்காக, தி.மு.க.,வை தொடர்ந்து ஆதரித்து வருகிறேன். சட்டசபை தேர்தலில், 177 தொகுதிகளில் போட்டியிட்ட வைகோ, தற்போது ஆறு எம்.எல்.ஏ., சீட்டுக்காக, தி.மு.க.,விடம் காத்து கிடப்பதா என கேட்கின்றனர். ஆறு சீட்டுக்காக காத்து கிடக்கவில்லை; கொள்கைக்காகவே தி.மு.க.,வை ஆதரிக்கிறேன்.

இவ்வாறு அவர் பேசினார்.

Advertisement