குடியுரிமைக்கு எதிரான உத்தரவு அமெரிக்க நீதிபதி முட்டுக்கட்டை

வாஷிங்டன்: அமெரிக்காவில் பிறக்கும் குழந்தைகளுக்கு தானாகவே பிறப்புரிமை கிடைப்பதை ரத்து செய்து அதிபர் டிரம்ப் உத்தரவிட்டுள்ள நிலையில், அவரது உத்தரவை நாடு முழுதும் தடை செய்ய உள்ளதாக மேரிலாண்ட் நீதிபதி கூறினார்.

அமெரிக்க அரசியலமைப்பின் விதிப்படி அந்நாட்டில் பிறக்கும் குழந்தைகளுக்கு இயற்கையாகவே அமெரிக்க குடியுரிமை கிடைக்கும். டொனால்டு டிரம்ப் இரண்டாவது முறையாக கடந்த ஜனவரியில் அதிபரானதும், இந்த வகை குடியுரிமையை ரத்து செய்து உத்தரவிட்டார்.

அதில், 'அமெரிக்காவில் சட்டவிரோதமாக வசிக்கும் பெற்றோர்களுக்கு பிறக்கும் குழந்தைகளுக்கு தானாகவே குடியுரிமை வழங்கப்படுவது நிறுத்தப்படும்' என கூறப்பட்டுள்ளது. இந்த உத்தரவு வரும் 27 முதல் அமலுக்கு வர இருந்தது. ஆனால் இந்த உத்தரவுக்கு நியூ ஹாம்ப்ஷயர் நீதிமன்றம் கடந்த 10ம் தேதி தடை விதித்தது. இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளனர்.

இந்நிலையில், மேரிலாண்ட் நீதிமன்றம் இந்த உத்தரவால் பாதிக்கப்பட்ட அனைத்து குழந்தைகளின் சார்பாக வழக்கை அனுமதிக்க உள்ளதாகவும், தடை உத்தரவு பிறப்பிக்க உள்ளதாகவும் அறிவித்தார்.

உச்ச நீதிமன்றம் மேல்முறையீட்டு வழக்கில் எடுக்கும் முடிவை பொறுத்து தன் உத்தரவை மேரிலாண்ட் நீதிபதி பிறப்பிக்க உள்ளார்.

Advertisement