மண் ரோட்டில் குடியிருக்குது மகாலட்சுமி நகர் வரிசெலுத்தியும் வசதி இல்லையென மக்கள் குமுறல்

மதுரை: மதுரை முத்துப்பட்டி மகாலட்சுமி நகர் குடியிருப்போர், மாநகராட்சிக்கு வரிசெலுத்தியும் எவ்வித வசதியும் இன்றி பிரச்னைகளின் மத்தியில் வாடி வதங்குகின்றனர்.

மாநகராட்சி 73வது வார்டு மகாலட்சுமி நகரின் 4 தெருக்களில் வசிக்கும் மக்கள், பஸ்போக்குவரத்துக்கு அழகப்பா நகருக்கு 2 கி.மீ., தொடக்க பள்ளிக்கு பழங்காநத்தத்திற்கு 3 கி.மீ.,யும், ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு யோகவிநாயகர் நகருக்கு 1.5 கி.மீ., செல்வது உட்பட பல்வேறு பிரச்னைகளில் உழல்கின்றனர்.

பாதாள சாக்கடை செயல்படுமா



மகாலட்சுமி நகர் வீட்டு உரிமையாளர்கள் நலச் சங்கத் தலைவர் முருகன், துணைத்தலைவர் கார்த்திக், செயலாளர் ரமேஷ், இணைச் செயலாளர் முருகேசன், பொருளாளர் செந்தில்குமார் கூறியதாவது:

மழை நேரம் ரோட்டில் இடுப்பளவு தண்ணீர் தேங்கும். வாகனங்கள் செல்வது சிரமம் என்பதால் ஆட்டோகூட வராது. இதனால் வயதானோர், குழந்தைகள் பாதிக்கின்றனர். மண்ரோடு முழுவதும் சகதியாகிவிடும். வசதிகள் குறித்து கவுன்சிலரிடம் கேட்டால் நிதி இல்லை என்பது அவரது வழக்கம்.

பாதாள சாக்கடை இணைப்பு வழங்காமல் கண்துடைப்பாக பணியாற்றியதால் திட்டம் செயல்படாமல் உள்ளது. மூன்று மாதங்களுக்கு ரூ.4 ஆயிரம் செலவிட்டு, செப்டிக் டேங்க் கிளியர் செய்கிறோம். குப்பை கொட்டும் வெள்ளைக்கல் பகுதி அரை கி.மீ., தொலைவில் உள்ளதால் துர்நாற்றம் வீசுகிறது. தென்கரை கண்மாய் வாய்க்காலில் செங்குன்றம் நகர், புதுக்குளம் பகுதி கழிவுகளை கலப்பதால் நேரடியாக பாதிக்கிறோம்.

பழுதாகும் மின்சாதனங்கள்



லேசாக காற்றடித்தாலும் அடிக்கடி மின்தடை ஏற்படுகிறது. குறைந்த மின் அழுத்தத்தால் 2வது தெருவில் வீட்டு உபயோக பொருட்கள் அடிக்கடி பழுதாகின்றன. எனவே பிரத்யேக டிரான்ஸ்பார்மர் அமைத்து மும்முனை மின்சாரம் வழங்க வேண்டும்.

காலியிடங்களில் வசிக்கும் விஷஜந்துகள் ஜாலியாக தெருவிலும், வீட்டிற்குள்ளும் வருகின்றன. இப்பகுதியில் வசிக்கவே முடியாது என்பதால் சிலர் வேறு பகுதிக்கு இடம்பெயர்ந்து விட்டனர்.

குப்பையில் உருவாகும் கொசுக்களை அழிக்க மாநகராட்சி ஊழியர்கள் வருவதே இல்லை. வாரம் இருமுறை கூட வராததால் வீடுகளில் குப்பை தேங்குகிறது. மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய வரியை நாங்கள் செலுத்தியும் எந்த வசதியும் கிடைக்கவில்லை. குடிநீரையும் தனியாரிடம் குடம் ரூ.15க்கு வாங்குகிறோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.

Advertisement