ஆக.8 ல் தலைமைச் செயலகத்தில் போராட 'டிட்டோ ஜாக்' முடிவு மதுரை மறியலில் 257 ஆசிரியர்கள் கைது

மதுரை: 'பழைய பென்ஷன் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் ஆக. 8ல் சென்னையில் முற்றுகை போராட்டம் நடத்துவோம்' என, மதுரையில் மறியல் போராட்டம் நடத்தி கைதான டிட்டோஜாக் அமைப்பினர் கூறினர்.
மதுரை பெரியார் பஸ் ஸ்டாண்ட் அருகே தமிழ்நாடு தொடக்கக் கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கைக்குழு (டிட்டோஜாக்) சார்பில் மறியல் போராட்டம் நடந்தது. தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்ட தலைவர் செல்வகுமரேசன், டிட்டோஜாக் நிர்வாகிகள் தென்னவன், பாரதிசிங்கம், பொற்செல்வன், கணேசன், பீட்டர் ஆரோக்கியராஜ், ராஜூ, சீனிவாசன், பிச்சை, தங்கவேல், மகாலிங்கம் கலந்துகொண்டனர்.
துவக்கி வைத்த மாநில ஒருங்கிணைப்பாளர் செல்லப்பாண்டியன் கூறியதாவது: நான்கு ஆண்டுகளாக எந்தக் கோரிக்கைக்கும் செவி சாய்க்காமல் தமிழக அரசு ஒட்டுமொத்த தொடக்க பள்ளி ஆசிரியர்களையும் வஞ்சிக்கிறது. பழைய ஓய்வூதிய திட்டத்தை உடனே நடைமுறைப்படுத்த வேண்டும். ஊதிய முரண்பாடுகளை நீக்கி மத்திய அரசு ஆசிரியர்களுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும்.
பதவி உயர்வை பாதிக்கும் வண்ணம் வெளியிட்டுள்ள அரசாணை 243ஐ ரத்து செய்ய வேண்டும். ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாக இருந்த உயர்கல்வி ஊக்க ஊதிய உயர்வை மீண்டும் வழங்க வேண்டும். பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட காலியிடங்களை அரசு நிரப்பாமல் காலம் தாழ்த்தி வருகிறது. ஏப்ரல், மே மாதங்களுக்கு ஊதியம் இல்லை என்று அரசு அறிவித்தது அதிர்ச்சியளிக்கிறது.
கடந்த 3 ஆண்டுகளாக பதவி உயர்வு இல்லாததால் தமிழகத்தில் தொடக்க, நடுநிலைப் பள்ளிகளில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பள்ளிகள் தலைமையாசிரியர் இல்லாமல் உள்ளது. இவற்றை வலியுறுத்தி ஆக. 8 ல் அனைத்து சங்கங்களும் சென்னை தலைமைச் செயலகத்தில் போராட உள்ளோம். இவ்வாறு கூறினார். மறியலில் ஈடுபட்ட 257 ஆசிரியர்கள் கைது செய்யப்பட்டனர்.
மேலும்
-
வாரிசு அரசியல் பழி சொல்லிற்கு ஆளாகி நிற்கிறேன் : வைகோ புலம்பல்
-
அ.தி.மு.க., முன்னாள் எம்.எல்.ஏ., வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் ரெய்டு
-
வரும் 20ம் தேதி 'செல்லமே செல்லம்' கலைத் திருவிழா
-
நெல்லையில் 10ம் வகுப்பு மாணவன் தற்கொலை; தனியார் பள்ளி பஸ்கள் தீ வைத்து எரிப்பு
-
பஹல்காம் தாக்குதல் நடத்திய ரெசிஸ்டன்ஸ் ப்ரண்ட்: பயங்கரவாத அமைப்பாக அறிவித்தது அமெரிக்கா!
-
அசைவ பால்: அசைந்து கொடுக்காத இந்தியா; அமெரிக்க வர்த்தக ஒப்பந்தம் தாமதமாகும் பின்னணி!