தி.மு.க., எம்.பி., பேச்சுக்கு காங்., பொது செயலாளர் கண்டனம்

புதுச்சேரி: காமராஜர் பற்றி பொய்யான தகவல்களை மேடையில் பேசிய திருச்சி சிவா எம்.பி.,க்கு புதுச்சேரி காங்., பொதுச் செயலாளர் சங்கர் கண்டனம் தெரிவித்துள்ளார்.

அவரது அறிக்கை:

காமராஜர் பற்றி பொய்யான தகவல்களை பேசிய தி.மு.க., எம்.பி., திருச்சி சிவாவை, புதுச்சேரி காங்., வன்மையாக கண்டிக்கிறது. காமராஜர் சுதந்திர போராட்டத்திற்காக 3 ஆயிரம் நாட்களுக்கு மேல் சிறையில் இருந்துள்ளார்.

காமராஜர் முதல்வராக இருந்தபோதும், நாடு முழுதும் கட்சிப்பணி ஆற்றியபோதும், எளிமையான வாழ்க்கையை வாழ்ந்து மறைந்தார்.

இன்றைய கால மாணவர்களுக்கு ஒரு அரசியல் தலைவர் எவ்வாறு இருக்க வேண்டும் என காமராஜரை போற்றி கற்பித்து வருகின்றனர். அப்படி வாழ்ந்த தலைவரை, ஏ.சி., அறை இல்லாமல் துாங்க மாட்டார் என்றும், மறைந்த தமிழக முதல்வர் கருணாநிதி கையை பிடித்து நாட்டையும், மக்களையும் நீ தான் காப்பாற்ற வேண்டும் என, காமராஜர் இறக்கும்போது கூறிவிட்டு இறந்தார் என நடக்காத சம்பவத்தை மேடையில் சொல்லிருப்பது கண்டனத்திற்குரியது.

பொய்யும், புரட்டும் என்றும் காமராஜரின் புகழுக்கும், நற்பெயருக்கும் களங்கம் ஏற்படுத்த முடியாது என புரிந்து கொண்டு, திருச்சி சிவா எம்.பி., வருத்தத்தை தெரிவிக்க வேண்டும்.

இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Advertisement