எதிர்க்கட்சி தொகுதிகளில் தான் வேலை நடக்கிறது இனியும் பொறுக்க மாட்டேன் என சாய்சரவணன்குமார் ஆவேசம்

புதுச்சேரி: ஊசுடு தொகுதியில் புதிய குடியிருப்புகளுக்கு அடிப்படை வசதி கேட்டு உள்ளாட்சி துறை அதிகாரிகளிடம் சாய்சரவணன் குமார் எம்.எல்.ஏ., வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது.

ஊசுடு தொகுதி எம்.எல்.ஏ.,வான முன்னாள் அமைச்சர் சாய்சரவணன்குமார் நேற்று தனது மனைவி பிரபாவதி மற்றும் தொகுதி மக்களுடன் புதுச்சேரியில் உள்ள உள்ளாட்சி துறை அலுவலகத்திற்கு வந்தார். அங்கு துறை இயக்குநர் சக்திவேல் இல்லாததால், துணை இயக்குநர் ரத்னா அலுவலகத்திற்கு சென்று அங்கிருந்த அதிகாரிகளிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

அப்போது அவர், வில்லியனுார் கொம்யூன் பஞ்சாயத்திற்கு உட்பட்ட ஊசுடு தொகுதியில் பல்வேறு பகுதிகளில் புதிய குடியிருப்புகள் உருவாகியுள்ளன. இந்த குடியிருப்புகளுக்கு சாலை, வாய்க்கால், மின்விளக்கு அமைக்க ரூ. 4 கோடி கேட்டு கோப்பு அனுப்பியும், இன்னும் உள்ளாட்சி துறை அனுமதி தரவில்லை. கோப்பை ஓராண்டாக இயக்குநர் டேபிளில் வைத்துள்ளார். அதற்கு, யார் அவருக்கு அதிகாரம் கொடுத்தது.

மாதம் 10 ஆயிரம் ரூபாய் சம்பளம் வாங்கும் சாதாரண ஊழியர் கடுமையாக உழைக்கின்றனர். ஆனால் மாதம் ரூ.2 லட்சம் வாங்கும் உங்களை போன்ற அதிகாரிகள் ஏன் மக்களை பற்றி சிந்திக்கவில்லை. கார் உள்பட சகல வசதிகளை மக்கள் வரிப்பணத்தில் பெற்றும் மக்களுக்கு எதுவும் செய்து கொடுக்கவில்லை.

ஊசுடு தொகுதியில் இருந்து கடந்த 10 ஆண்டுகளில் ரூ.15 கோடி 'டெவலப்மென்ட் சார்ஜ்' வசூலிக்கப்பட்டுள்ளது. அதிலிருந்து ரூ. 4 கோடி ரூபாயில் புதிய குடியிருப்புகளுக்கு சாலை உள்ளிட்ட வசதிகளை செய்து கொடுக்க சொல்கிறோம். உங்கள் பணத்தில் இருந்து கேட்கவில்லை. அப்படி இருந்தும் ஏன், ஓராண்டாக செய்து கொடுக்கவில்லை.

எதிர்க்கட்சி தொகுதிகளான வில்லியனுாரில் அனைத்தும் நடக்கிறது. தலீத் தொகுதி என்பதால் புறக்கணிக்கின்றீர்களா? முதல்வர், அமைச்சர் கையெழுத்திட்டும் ஓராண்டாக கோப்பை வைத்திருப்பது ஏன்? தொகுதி மக்களுக்கு, எம்.எல்.ஏ.,வான நான் என்ன பதில் சொல்வது. பொறுமைக்கும் ஒரு எல்லை உண்டு. இதற்குமேல் பொறுக்க மாட்டேன். இன்னும் 2 நாள் தான் உங்களுக்கு 'டைம்'. அதற்கும் ஊசுடு தொகுதி வளர்ச்சிக்கான கோப்பிற்கு அனுமதி கிடைக்காவிட்டால், தொகுதி மக்களுடன் தலைமை செயலகத்தை முற்றுகையிடுவேன். தொகுதி வளர்ச்சி கோப்பிற்கு அனுமதி கிடைக்கும் வரை தலைமை செயலகத்தில் மக்களுடன் அமர்ந்து போராட்டம் நடத்துவேன் என்றார்.

அதிகாரிகள், உடனடியாக அனைத்து கோப்புகளையும் சரி செய்துவிடுவதாக கூறினர். அதில் சமாதானமடைந்த சாய்சரவணன் குமார் அங்கிருந்து புறப்பட்டு சென்றார்.

@block_B@

பூட்டு போடுவோம்

ஊசுடு தொகுதி மக்களுக்கு அடிப்படை வசதி செய்து கொடுக்காத உள்ளாட்சி துறையை கண்டித்து பூட்டுபோடுவோம் என, ஆதரவாளர்கள் கொந்தளிந்தனர். அதை கேட்ட சாய்சரவணன்குமார், அப்படி செய்ய வேண்டாம். கால அவகாசம் கேட்டுள்ளனர். அதற்குள் செய்யாவிட்டால் அப்புறம் பார்த்து கொள்வோம் என ஆதரவாளர்களை சமாதானப்படுத்தினார்.block_B

Advertisement