ஒரு நபர் குழு கோப்பினை மத்திய அரசு ஒப்புதலுக்கு அனுப்ப கோரிக்கை

புதுச்சேரி: ஒரு நபர் குழு கோப்புகளை மத்திய அரசின் ஒப்புதலுக்கு அனுப்புவதற்கு நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, புதுச்சேரி அரசு தொழில்நுட்ப உதவியாளர்கள், சுகாதார ஆய்வாளர்கள் மற்றும் சுகாதார உதவியாளர்கள் சங்கத்தினர் முதல்வர் ரங்கசாமியை சந்தித்து கோரிக்கை வைத்தனர்.

புதுச்சேரி அரசு தொழில்நுட்ப உதவியாளர்கள், சுகாதார ஆய்வாளர்கள் மற்றும் சுகாதார உதவியாளர்கள் சங்கத்தின் சார்பில், சட்டசபையில் முதல்வர் ரங்கசாமியை சந்தித்து கோரிக்கை வைத்தனர். அதில், சுகாதார ஆய்வாளர் தொடர்பான ஒரு நபர் குழு மூலம் அளிக்கப்பட்ட ஊதிய உயர்வுக்கு மத்திய அரசின் ஒப்புதலை பெறுவதற்கான கோப்புகள் நிதி செயலரிடம் தயாராக உள்ளது. இது தொடர்பாக தலைமை செயலரிடம் பேசி, மத்திய அரசின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்க வேண்டும். ஆனால் 6 மாதங்களுக்கு மேலாக இந்த கோப்புகள், நிதித் துறையிலேயே உள்ளது. இதுநாள் வரை மத்திய அரசுக்கு அனுப்பாமல் காலம் தாழ்த்தி வருகின்றனர்.

முதல்வர் தலையிட்டு ஒரு நபர் குழு கோப்புகளை விரைந்து மத்திய அரசின் ஒப்புதலுக்கு அனுப்புவதற்கு துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர். முதல்வர் கோரிக்கையை பரிசீலனை செய்வதாக உறுதியளித்தார்.

சந்திப்பின் போது சுகாதார ஊழியர் சம்மேளன பொதுச்செயலாளர் ஜவஹர், சங்க செயலாளர் ஜெகநாதன், துணை தலைவர் பன்னீர்செல்வம், இணை செயலாளர் சந்தனாவதி, அமைப்பு செயலாளர் கிரி, செயற்குழு உறுப்பினர்கள் தயாளன், கமலா உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

Advertisement