வணிகர் நல வாரியத்தில் கட்டணமின்றி உறுப்பினராக பதிவு செய்ய அவகாசம்

கள்ளக்குறிச்சி: தமிழ்நாடு வணிகர் நல வாரியத்தில் சேர்க்கைக் கட்டணத் தொகை 500 செலுத்துவதிலிருந்து 6 மாத காலத்திற்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 40 லட்சம் ரூபாய்க்குள் வருமானம் ஈட்டும் வணிகர்களுக்கு கடந்த ஜூன் 1 முதல் நவம்பர் 30 வரை 6 மாத காலத்திற்கு தமிழ்நாடு வணிகர் நலவாரியத்தில் உறுப்பினராக பதிவு செய்யும் அனைத்து சிறு மற்றும் குறு வணிகர்களுக்கும் சேர்க்கை கட்டண தொகை 500 ரூபாய் செலுத்துவதிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து வணிகர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்துவது தொடர்பான கூட்டம் கலெக்டர் பிரசாந்த் தலைமையில் நடந்தது.

கூட்டத்தில் நடந்த கலந்துரையாடல் மற்றும் வணிகர்களின் சந்தேகங்களுக்கு விளக்கம் அளிக்கப்பட்டதுடன், வணிகர்களை தமிழ்நாடு வணிகர் நலவாரியத்தில் புதிய உறுப்பினராக சேரவும் அறிவுறுத்தப்பட்டது. ஏற்கனவே உறுப்பினராக பதிவு செய்த சிறு மற்றும் குறு வணிகர்களுக்கு உறுப்பினர் அட்டை வழங்கப்பட்டது.

நலவாரியத்தில் உறுப்பினர்களாகப் பதிவு செய்ய 200 விண்ணப்பங்கள் பெறப்பட்டன. இந்த விண்ணப்பங்களுக்கான உறுப்பினர் அடையாள அட்டையை விரைவில் வழங்க சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு கலெக்டர் அறிவுறுத்தினார்.

கூட்டத்தில் வணிக வரித்துறை இணை ஆணையர் சங்கரமூர்த்தி, துணை ஆணையர் ஹேமா, அனைத்து வியாபாரிகள், வணிகர் சங்க நிர்வாகிகள், அரசு அலுவலர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.

Advertisement