ஆன்லைன் பண மோசடிக்கு கமிஷன் பெற்ற இருவர் கைது

மதுரை: ஆன்லைன் மூலம் மோசடி செய்து அந்த பணத்தை பரிமாற்றம் செய்து கமிஷன் பெற்ற கர்நாடகாவைச் சேர்ந்த பெண் உட்பட இருவரை சைபர் கிரைம் போலீசார் கைது செய்தனர்.

ஆன்லைன் பகுதி நேர வேலை என்ற பெயரில் முதலீடு செய்தால் அதிக லாபம் சம்பாதிக்கலாம் என மதுரை ஒத்தக்கடையைச் சேர்ந்த நபரிடம் பிப்ரவரியில் ரூ.51 லட்சம், கடந்தாண்டு கருப்பாயூரணியைச் சேர்ந்தவரிடம் ரூ.14.63 லட்சத்தை மோசடி செய்ததாக இரு புகார்கள் செய்யப்பட்டன. தனிப்படை அமைக்கப்பட்டு பணம் அனுப்பிய பல்வேறு வங்கி கணக்குகளிலிருந்த ரூ.17 லட்சம் முடக்கப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

இப்படி ஆன்லைன் மோசடி செய்து பெறும் பணத்தை வங்கி கணக்குகள் மூலம் பரிமாற்றம் செய்வதற்கு கமிஷன் பெற்ற கர்நாடகா மாநிலம் பெங்களூரு பொம்மனஹள்ளி பகுதியைச் சேர்ந்த சபீர் மகன் முகமது ஆசிப், தற்போது கர்நாடகா ஜீவன்பீமாநகரில் வசிக்கும் பஞ்சாப் ராஜ்புராசுந்தர்நகரைச் சேர்ந்த அஜய் சர்மா மகள் அங்கீட் சர்மாவை மதுரை சைபர் கிரைம் போலீசார் கைது செய்தனர். அவர்களின் வங்கி கணக்குகளில் லட்சக்கணக்கில் பரிமாற்றம் நடந்தது விசாரணையில் தெரிந்தது.

பணமோசடி தொடர்பான சைபர் குற்றங்களால் பாதிக்கப்பட்டவர்கள் 1930 ஐ தொடர்பு கொள்ளலாம். www.cybercrime.gov.in இணையதளத்தில் புகார் செய்யலாம் என எஸ்.பி. அரவிந்த் தெரிவித்துள்ளார்.

Advertisement