தனியார் பள்ளி நிர்வகிப்பதில் பிரச்னை மாணவர்களுடன் ஆசிரியர்கள் தர்ணா

சின்னாளபட்டி:சின்னாளபட்டியில் தனியார் பள்ளியை நிர்வகிப்பதில் அறங்காவலர்களுக்குள் நிலவிய பிரச்னையை தொடர்ந்து ஆசிரியர்களுடன் மாணவர்கள் பள்ளி நுழைவுவாயிலில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர்.

சின்னாளபட்டியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 1940 மாணவர்கள் படிக்கின்றனர். 86 ஆசிரியர்கள், 48 பணியாளர்கள் வேலை பார்க்கின்றனர். சில ஆண்டுகளாக பள்ளியை நிர்வகிப்பதில் அறங்காவலர்களுக்குள் கருத்து வேறுபாடு தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்குகள் உள்ளது. நேற்று பள்ளியில் வகுப்புகள் துவங்கி முதல் பருவ தேர்வுக்கு ஆயத்தமாகினர். சற்று நேரத்தில் ஒரு தரப்பினர் வளாகத்தில் நுழைய முயன்றனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த மேலாளர் பாரதிராஜா உள்ளிட்ட ஊழியர்களை தாக்கினர். இதையடுத்து உருவான வாக்குவாதத்தின் எதிரொலியாக காலை முதலே வகுப்புகள் நடக்கவில்லை. பள்ளி நிர்வகித்து வந்த மற்றொரு தரப்பினர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். வெகுநேரமாகியும் போலீசார் வராத சூழலில் ஆசிரியர்கள், 9 முதல் பிளஸ் 2 வரை படிக்கும் மாணவர்கள் நுழைவுவாயில் முன்பு திரண்டனர். பாதுகாப்பு கோரி கோஷங்கள் எழுப்பியபடி தர்ணாவில் ஈடுபட்டனர்.

ஆத்துார் தாசில்தார் முத்துமுருகன், ஏ.டி.எஸ்.பி., க்கள் ரமேஷ், குமரேசன், தனியார் மெட்ரிக் பள்ளிகளின் மாவட்ட கல்வி அலுவலர் ஜான்பிரிட்டோ உள்ளிட்ட அதிகாரிகள் அங்கு வந்தனர். மதியம் 1:30 மணிக்கு தர்ணாவில் ஈடுபட்டோரை வகுப்புகளுக்கு அனுப்பினர். இரு தரப்பினர் இடையே பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. அமைதி பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணப்படும் வரை போலீஸ் பாதுகாப்புடன் பள்ளி செயல்பட இருதரப்பினரும் ஒப்புக்கொண்டனர்.

Advertisement