காமராஜர் இறந்த வீடியோவை பார்த்தால் கருணாநிதி மரியாதை வைத்தது தெரியும் சொல்கிறார் அமைச்சர் பெரியசாமி

திண்டுக்கல்:''மறைந்த முன்னாள் முதல்வர் காமராஜர் இறந்த வீடியோவை பார்த்தால் தெரியும் அவருக்கு முன்னாள் முதல்வர் கருணாநிதி எவ்வளவு செய்தார், எவ்வளவு மரியாதை வைத்திருந்தார்,'' என, திண்டுக்கல் அருகே தாடிகொம்பு மறவபட்டியில் அமைச்சர்பெரியசாமி கூறினார்.

அவர் மேலும் கூறியதாவது: காமராஜர் குடியாத்தம் தொகுதியில் போட்டியிட்ட போது தி.மு.க., போட்டியிடவில்லை. பச்சை தமிழர் வெற்றி பெற வேண்டும், முதல்வராக இருக்க வேண்டும் என மறைந்த முதல்வர் அண்ணாதுரை கூறினார். அதே வழியில் தான் முன்னாள் முதல்வர் கருணாநிதியும் இருந்தார். காமராஜர் இறந்தபின் அவருக்கு இரவு, பகலாக துாங்காமல் நினைவு மண்டபம் கட்டுவதற்கு இடம் கொடுத்தவர் முன்னாள் முதல்வர் கருணாநிதி என்பது அனைவருக்கும் தெரியும். காமராஜர் இறந்த வீடியோவை பார்த்தால் தெரியும். சாதாரண குடும்பத்தில் இருக்கக்கூடிய மகன் கூட தந்தைக்கு இவ்வளவு செய்ய மாட்டார். ஆனால் அனைத்து பணிகளையும் முன்நின்று முன்னாள் முதல்வர் கருணாநிதி செய்தார். காமராஜர் மீது கருணாநிதி எப்படி ஒரு மதிப்பு மரியாதை வைத்திருந்தார் என்பதை வரலாறு கூறியுள்ளது. காமராஜர் பிறந்த நாளை கல்வி நாளாக அறிவித்து விடுமுறை விட்டு வருகிறோம். அவரது புகழை போற்றும் ஒரே இயக்கம் தி.மு.க.,வும், ஸ்டாலினும் தான்.

சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க., மிகப்பெரிய வெற்றி பெறும் என முன்னாள் முதல்வர் பழனிசாமியால் எவ்வளவு நாள் சொல்ல முடியும் என தெரியவில்லை. பத்து முறை பொய் கூறினால் உண்மையாகி விடும் என அவர் நினைக்கிறார்.

ஆசிரியர்களின் கோரிக்கைகள் குறித்து முதல்வர் ஸ்டாலின் ஏற்கனவே சட்டசபையில் கூறி உள்ளார். அவர்களது ஓய்வூதியம் அதற்கான கமிட்டி அமைத்து பரிசீலனை செய்யப்பட்டு வருகிறது. விரைவில் நல்ல முடிவு வரும் என்றார்.

Advertisement