கமகமக்கும் நெத்திலி கருவாடு பாம்பனில் கிலோ ரூ.400

ராமேஸ்வரம்:ராமேஸ்வரம் அருகே பாம்பனில் கமகமக்கும் கருவாடு கிலோ ரூ. 400க்கு விற்பதால், சுற்றுலா பயணிகள் ஆர்வமுடன் வாங்கி செல்கின்றனர்.

கிராமங்களில் கண்மாய், குளத்தில் வாழும் அயிரை மீன்கள் போல், கடலில் மீனவர்கள் வலையில் சிக்கும் நெத்திலி மீன்கள் இருக்கும். இந்த நெத்திலி மீனை உப்பு சேர்க்காமல் காய வைத்து கருவாடாகி பாம்பனில் ராமேஸ்வரம், மதுரை தேசிய நெடுஞ்சாலை ஓரத்தில் ஆங்காங்கே உள்ள கருவாடு கடையில் குவித்து வைத்து விற்கின்றனர். ருசியான நெத்திலி கருவாட்டுக்கு மவுசு அதிகம் என்பதால் தனுஷ்கோடி வரும் சுற்றுலா பயணிகள் நெத்திலியை ஆர்வமுடன் வாங்கிச் செல்கின்றனர்.

சில மாதங்களுக்கு முன் கிலோ நெத்திலி ரூ. 300க்கு விற்ற நிலையில், கடல் ஏற்பட்ட தட்பவெப்ப மாறுபாட்டினால் நெத்திலி மீன் வரத்து குறைந்தது. இதனால் தற்போது கிலோ ரூ.400க்கு வியாபாரிகள் விற்கின்றனர். இந்த நெத்திலி கருவாட்டை தமிழகம், கேரளா, ஆந்திரா சுற்றுலா பயணிகள் விரும்பி வாங்குவதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

ஆபத்து



இந்த கருவாடு கடைகள் தேசிய நெடுஞ்சாலை ஓரத்தில் ஆக்கிரமித்து உள்ளதால், கருவாடு வாங்கும் ஆர்வத்தில் சுற்றுலா பயணிகள் சாலை ஓரத்தில் நிற்பதால் விபரீதம் ஏற்படும் அபாயமும் உள்ளது. ஆகையால் கடைகளை சாலை ஓரத்தில் இருந்து 20 அடி தள்ளி வைக்க அதிகாரிகள் உத்தரவிட வேண்டும்.

Advertisement