ராமதாஸ் - அன்புமணி சமாதான பேச்சு தீவிரம்; மகளிர் மாநாட்டில் இணைந்து பங்கேற்க முடிவு

சென்னை : பா.ம.க., நிறுவனர் ராமதாஸ், தலைவர் அன்புமணி இடையே, சமாதான பேச்சு இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. பூம்புகார் மகளிர் மாநாட்டில், இருவரும் இணைந்து பங்கேற்க முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
கடந்த 2024 டிச., 28ம் தேதி, புதுச்சேரியில் நடந்த பா.ம.க., பொதுக் குழுவில், அப்பா -- மகன் இடையே வெடித்த மோதல், ஆறு மாதங்களை கடந்தும் நீடிக்கிறது.
கடந்த ஏப்., 10ல் அன்பு மணியை தலைவர் பதவியில் இருந்து நீக்கிய ராமதாஸ், 'நானே தலைவர்' என அறிவித்தார். அன்று முதல் இருவரும் தனித்தனியாக செயல்பட்டு வருகின்றனர்.
சமாதான முயற்சி
இருவரையும் சமாதானப்படுத்த, ஆடிட்டர் ஒருவரும், முன்னாள் எம்.எல்.ஏ., ஒருவரும் இணைந்து மேற்கொண்ட முயற்சிகள் தோல்வியில் முடிந்தன. ஆனாலும், சமாதான முயற்சிகளை ஆடிட்டர் தொடர்ந்து வருவதாக கூறப்படுகிறது.
ராமதாஸ் குடும்பத்தினர் மட்டுமல்லாது, பா.ஜ., - அ.தி.மு.க.,வைச் சேர்ந்த முக்கிய தலைவர்களும், ராமதாஸ், அன்புமணி தரப்பில் தொடர்ந்து பேசி வருவதாக அக்கட்சியினர் தெரிவிக்கின்றனர்.
அவர்கள், 'தேர்தல்களில் பா.ம.க., தொடர்ந்து தோற்று வந்தாலும், வன்னியர் அடர்த்தியாக உள்ள பகுதிகளில், அவர்களுடைய ஆதரவு பா.ம.க.,வுக்கே உள்ளதாக அறியப்படுகிறது.
'அப்பா -- மகன் மோதல் இனியும் நீடித்தால், அது பா.ம.க.,வை பலவீனப்படுத்துவதோடு, தி.மு.க.,வுக்கு சாதகமாகி விடும்; இது நாள் வரை நீடித்து வந்த வன்னியர்கள் ஆதரவையும் வெகுவாக இழக்க நேரிடும்' என, ராமதாஸ் மற்றும் அன்புமணியிடம் எடுத்துரைத்து உள்ளனர்.
ராமதாசின் மகள்கள், அன்புமணியின் மனைவி சவுமியா உள்ளிட்டோரிடம், பா.ஜ., தரப்பில் பேசியுள்ளனர்.
அதை தொடர்ந்து, ராமதாஸ், அன்புமணி இருவரும், சமாதான உடன்படிக்கைக்கு வந்துள்ளதாகவும், விரைவில் இருவரும் சேர்ந்து சமாதானத்தை அறிவிக்க முடிவு செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
இதை அறிந்த கட்சியின் முக்கியஸ்தர்கள், இரு தரப்புக்கும் இடையே திடீரென ஏற்பட்டிருக்கும் சமாதான உடன்படிக்கை என்ன என்பது குறித்த ஆய்வில் ஈடுபட்டுள்ளனர்.
இதற்கிடையில், அடுத்த மாதம் 10ம் தேதி பூம்புகாரில், ராமதாஸ் அறிவித்துள்ள மகளிர் மாநாட்டில், அப்பாவும், மகனும் இணைந்து பங்கேற்பர். அதற்காக அன்புமணி பெயர், படத்துடன் புதிய அழைப்பிதழ் தயாராகி வருகிறது என, பா.ம.க.,வினர் தெரிவித்தனர்.
பெரிதாக்க வேண்டாம்
இந்நிலையில், தைலாபுரத்தில் உள்ள தன் வீட்டில், ஒட்டு கேட்பு கருவி இருந்ததாக, காவல் துறையில் ராமதாஸ் புகார் அளித்துள்ளார். தனியார் துப்பறிவு நிபுணர்களை வைத்து, அவர் தனியாகவும் விசாரித்து வருகிறார்.
அதன் முடிவுக்காக ராமதாஸ் காத்திருப்பதாகவும், அதன்பின் அவர் முக்கிய முடிவை அறிவிப்பார் என்றும் அவரது ஆதரவாளர்கள் கூறுகின்றனர்.
உடன்படிக்கை சுமுகமாக முடிந்துள்ள நிலையில், ஒட்டு கேட்பு விவகாரத்தை பெரிதாக்க வேண்டாம் என, குடும்பத்தினர் ராமதாசிடம் கேட்டுக் கொண்டுள்ளதாகவும் தகவல்கள் கூறுகின்றன.