இரவில் வலம் வரும் ட்ரோன்கள்: தூக்கம் தொலைத்து பீதியில் தவிக்கும் 5 மாவட்ட மக்கள்

லக்னோ; உ.பி.யில் மர்மமான முறையில் வானில் வட்டம் அடிக்கும் ட்ரோன்களினால் 5 மாவட்ட மக்கள் தூக்கம் இழந்துள்ளனர்.



உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள அம்ரோஹா, பிஜ்னோர், மொராதாபாத், ராம்பூர் மற்றும் சம்பல் ஆகிய 5 மாவட்டங்களில் இரவு நேரத்தில் ட்ரோன்கள் பறப்பதை மக்கள் கண்டுள்ளனர். கிட்டத்தட்ட 2 வாரங்களாக இத்தகைய சம்பவங்கள் நடந்து வருவதால் அப்பகுதி மக்கள் பயத்தில் உள்ளனர்.


தூக்கத்தை இழந்துள்ள அவர்கள், ட்ரோன்கள் வானில் பறப்பதால் கைகளில் தடிகள் மற்றும் குச்சிகளுடன் இரவு முழுவதும் ரோந்து வர ஆரம்பித்ததுள்ளனர். இருட்டு நேரங்களில் ட்ரோன்கள் பறப்பதால், வீடுகளில் திருட ஏதுவாக நோட்டமிடுவதாக ஊர் மக்கள் கூறுகின்றனர்.


மொராபாத்தில் உள்ள மூந்தபாண்டே, ஜக்தல்பூர், வீர்பூர், ஷெர்பூர் ஆகிய கிராமங்களில் தான் ட்ரோன்கள் மீண்டும்,மீண்டும் காணப்படுகின்றன. வானில் ஏதேனும் சத்தம் அல்லது ஒளி தென்பட்டால் பீதியுடன் உலவ ஆரம்பிக்கின்றனர்.


5 மாவட்ட மக்கள் இரவில் பீதியுடன் இருப்பதை அறிந்த போலீசார், இது வரை நடத்தப்பட்ட விசாரணையில் ட்ரோன்கள் பறந்து சென்றன என்பதற்கான அடையாளம் இல்லை, அனைத்தும் மக்களின் வதந்தி என்று தெரிவித்துள்ளனர்.


போலீசாரின் கூற்று ஒருபக்கம் இருந்தாலும், இரவு நேர கண்காணிப்பில் இருந்து ஊர்மக்கள் பின்வாங்கவில்லை.

Advertisement